பிரதமர் ஹரிணியுடன்அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: இலங்கை மக்கள் கட்சி
பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சராக இத்திட்டத்தைத் தொடங்கியபோது சில தவறுகள் நேர்ந்ததை அவர் ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது.
6 ஆம் தர ஆங்கிலப் பாடத்தொகுதியில் காணப்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களைநீக்கி,2027 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடத்தொகுப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நாட்டில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய கன்னங்கரவைப் போன்று, கல்வி முறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் ஒன்றிணைய வேண்டு மென இலங்கை மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அஜித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி கல்விச் சீர்திருத்தம் என்பது அத்தியாவசியமானதொன்றாகும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்தொகுதியில் காணப்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை நீக்கி, அக்குறைபாடுகளைச் சீர்செய்து 2027 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடத்தொகுப்பை அரசாங்கம் வெளியிட தீர்மானித்துள்ளது. பிரதமர் ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சராக இத்திட்டத்தைத் தொடங்கியபோது சில தவறுகள் நேர்ந்ததை அவர் ஒப்புக்கொண்டது வரவேற்கத்தக்கது.
மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை இந்த திருத்தங்களை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பது ஜனநாயகப் பண்பின் வெளிப்பாடாகும். இந்நாட்டில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய கன்னங்கரவைப் போன்று, கல்வி முறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் ஒன்றிணைய வேண்டும். அரசியல் இலாபத்திற்காக இந்த சீர்திருத்தத்தை முடக்கி அமைச்சர்களை பதவி நீக்கக் கோருவதை விடுத்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவது அவசியம்.
நாட்டின் கலாசாரம், மதம் மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இக்கல்வி முறை அமைய வேண்டும். 99 சதவீத எழுத்தறிவு கொண்ட இந்நாட்டில், அதனை நடைமுறைக்கு ஏற்ற அறிவுத் திறனாக மாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. தேசப்பற்றுள்ள, மனிதாபிமானம் மிக்க ஒரு சந்ததியை உருவாக்குவதே கல்வியின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்றார்.





