13 நாட்களில் 77 விபத்துகள் 82 பேர் உயிரிழப்பு
கவனயீனம் காரணமாக ஏற்படக்கூடிய அபாயத்தை உணராமல் சாரதிகள் வாகனங்களைச் செலுத்துகின்றனர்.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 77 பாரதூரமான விபத்துகளில் சிக்கி 82 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 22,153 வீதி விபத்துகள் சம்பவித்துள்ளன. அவற்றில் 2,597 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், குறித்த விபத்துகளில் சிக்கி 2,746 பேர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இது பாரதூரமான விடயமாகும்.
இந்நிலையில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 77 பாரதூரமான விபத்துகளில் சிக்கி 82 பேர் கவலைக்கிடமான வகையில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்த விபத்துச் சம்பவங்களில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமைமாத்திரம் 11 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் 16 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். முந்தலம் பகுதியில் 3 விபத்துகளும் கிளிநோச்சிப் பகுதியில் 4 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன. சாரதிகளின் கவனக்குறைவே இந்த விபத்துகளுக்கு காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வாகனத்தைச் செலுத்தும் சாரதிகள், அதில் பயணிக்கும் ஏனையோர், சிறுவர்கள் என அனைவரது வாழ்வையும் நலனையும் கருத்திற்கொண்டு செயற்படுவது அவசியம்.
வாகனத்தைச் செலுத்தும்போது சாரதிகளுக்குச் சோர்வு அல்லது தூக்க கலக்கம் ஏற்படுவதை உணர்ந்தால் வாகனத்தை அரை மணிநேரத்திற்கு வீதியின் ஓரமாக நிறுத்தி, சோர்வு நீங்கியவுடன் வாகனத்தைச் செலுத்துங்கள். கவனயீனம் காரணமாக ஏற்படக்கூடிய அபாயத்தை உணராமல் சாரதிகள் வாகனங்களைச் செலுத்துகின்றனர்.
இவ்வாறு விபத்துகள் சம்பவிப்பதும், பலர் உயிரிழப்பதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 17 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களே விபத்துகளில் அதிகம் உயிரிழப்பதாக வருடாந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.





