அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டாக ஆராயவேண்டுமென காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து
'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான அக்கிரமங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள்.
இதுவரை காலமும் பல்வேறு தரப்பினரால் மறுக்கப்பட்டுவந்த பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மீறல்கள் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மூலம் நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி, இவ்வறிக்கையை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆராயவேண்டும் என வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்டது.
இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட, முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நாவின் இப்புதிய அறிக்கையைத் தாம் பெரிதும் வரவேற்பதாகவும், உலகளாவிய ரீதியில் பல்வேறு மனித உரிமை மீறல் நெருக்கடிகள் தலைதூக்கியிருக்கும் சூழ்நிலையில், தமது பிரச்சினைகளை ஐ.நா மறந்துவிட்டது எனக் கருதியிருந்த வேளையில் இவ்வறிக்கை வெளியானது தமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.
'இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான அக்கிரமங்கள் இடம்பெற்றதாக நாம் கூறியபோது, அவ்வாறான சம்பவங்கள் நிகழவில்லை எனப் பலரும் மறுத்துவந்தார்கள். ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் மூலம் நாம் கூறிய அனைத்து விடயங்களும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம்? இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச மக்கள் தீர்ப்பாயம், சர்வதேச நீதிமன்றம் போன்ற கட்டமைப்புக்களின் முன்னிலையில் பாரப்படுத்தப்போகிறோமா? அதனை எவ்வாறு செய்வது? என்பன தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் லீலாதேவி குறிப்பிட்டார்.
இருப்பினும் இந்த ஆராய்வு செயன்முறை குறித்தவொரு தரப்பினருக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், மாறாக அதில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





