அனைத்து மாணவர்களுக்கும் சமமான,வாய்ப்பு: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, 18-01-2026 அன்று புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.
விஞ்ஞான பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்த பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.
ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.
பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காக சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாக தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், எனவும் பிரதமர் தெரிவித்தார்.





