அரசாங்கத்தின் மீது அவசியமான அழுத்தங்களைக் கூட்டாகப் பிரயோகிப்போம்: ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து இவ்வருடத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்தின்மீது பிரயோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இவ்வாண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் எனவும், அதற்குரிய அழுத்தங்களை இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கவேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கட்டிருப்பதாக அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
மாகாணசபைத்தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பின்னணியில், 18-01-2026 அன்று வவுனியாவில் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில், அ தன் பங்காளிக்கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் சமத்துவக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் மாகாணசபைத்தேர்தல்கள், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி இவ்வாண்டு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியினால் முன்னெடுக்கப்படவேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் எனவும், அதுகுறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கில் கூட்டணியினால் ஒவ்வொரு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், தமிழரசுக்கட்சியுடன் இணைந்து இவ்வருடத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்தின்மீது பிரயோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதேவேளை புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுமாயின், அதில் உள்ளடக்கப்படவேண்டிய தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கம் தமிழ்த்தரப்புடன் நிச்சயமாகக் கலந்துரையாடவேண்டும் என்றும், அரசாங்கத்திடம் முன்மொழியவேண்டிய தீர்வுத்திட்டம் குறித்து சகல தமிழ்த்தரப்புக்களும் ஒன்றிணைந்து பொது இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பிரஜாசக்தி' வேலைத்திட்டம் தொடர்பில் இக்கூட்டத்தில் கரிசனையை வெளிப்படுத்திய பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள், அத்திட்டத்தின் அமலாக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயன்முறையோ அல்லது சட்டபூர்வத்தன்மையோ பேணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதுடன் அத்திட்டத்தை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யவேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 'வெறுமனே இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நடைப்பயிற்சிக்கு செல்கிறார். அவ்வாறிருக்கையில் எத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவர முற்படுகிறது? தமக்கு எதிராக தெற்கில் 'அரகலய' போன்ற கிளர்ச்சி ஒன்று உருவாகிவிடும் என அஞ்சுகிறதா?' என்றவாறான கருத்துக்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் புதிய வரைபை முற்றாக எதிர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.





