அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீரும்: அம்பிகா சாமுவேல் எம்.பி.
குளறுபடிகளை சரி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் குழுவொன்றை நியமித்து முறைகேடுகளை நிவர்த்தி செய்தது.
அரசாங்கம் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-01-2026 அன்று இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அஸ்வெசும நலனபுரி திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடுப்பனவுகள் தகுதியுடையோருக்கு கிடைக்காமலும் தகுதி இல்லாதோருக்கு கிடைத்தும் வந்த நிலையில் அது ஒரு குளறுபடிகள் நிறைந்த திட்டமாகவே இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த குளறுபடிகளை சரி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் குழுவொன்றை நியமித்து முறைகேடுகளை நிவர்த்தி செய்தது. அந்த வகையில் தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே அந்த கொடுப்பனவுகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்கள் மற்றும் மலையக மக்களுக்கும் கூட இந்த கொடுப்பனவுகள் கிடைக்காமல் இருந்தன. தற்போது அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.வறுமை நிலையில் உள்ளவர்களை வறுமைக்கோட்டில் இருந்து வெளிக்கொண்டுவந்து அவர்களை பலப்படுத்துவதே இந்த அஸ்வெசும திட்டத்தின் நோக்கமாகும்.
அந்த வகையில் வறுமை நிலையில் உள்ளோர், விசேட தேவையுடையோர் என அந்த திட்டத்தின் கீழான அனைத்து கொடுப்பனவுகளும் தற்போதைய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னர் 7500 ரூபாவைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் தற்போது 10,000 ரூபாவை பெற்று வருகின்றனர்.
அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவையும் பாதணிகளைப்பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளையும் அரசாங்கம் வழங்குகின்றது என்றார்.





