அரசியல் இயலுமை ஆட்சியாளர்களுக்கு தேவை: ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற சுயாதீனமான கட்டமைப்பை நிறுவுவது பொருத்தமானதாகும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற சுயாதீன கட்டமைப்புக்களை ஸ்தாபித்து சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான அரசியல் இயலுமை ஆட்சியாளர்களுக்கு தேவையாக உள்ளது. குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்கள் கருத்துச்சுதந்திர வெளிப்பாட்டுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியை வழங்குவதாக தேர்தலில் வாக்குறுதி அளித்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்தார்.
இலங்கை இதழியற் கல்லூரியில் 19-01-2026 அன்று சுதந்திர ஊடக இயக்கம், சுதந்திர ஊடக தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த 'கறுப்பு ஜனவரி இன்னமும் இருட்டாகவே உள்ளது' எனும் தொனிப்பொருளிலான கறுப்பு ஜனவரி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மூன்று சந்தர்ப்பங்களில் போர் நிகழ்ந்துள்ளது. இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும், பல்வேறு விதமான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கருத்துச் சுதந்திரத்தினை முடக்கும் வகையில் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தல் உள்ளிட்ட காணாமலாக்கபட்ட சந்தர்ப்பங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதில் வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்பட்ட சொற்ப விடங்களே காணப்படுகின்றன.
ஜனாதிபதி சாலிய பீரிஸ் முக்கிய விடயமொன்றை பகிர்ந்து கொண்டார். அவர் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் தலைமையையும் வகித்திருந்தார். அவரைச் சந்தித்த தமிழ் பெண் ஒருவர் 1983ஆம் ஆண்டு தனது கணவன் காணாமல்போயுள்ளதாக கூறியதோடு இன்னமும் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரியாது உள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் திருமணம் நடைபெற்ற அவர் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் நிலையில் 1983இல் அவரது கணவன் காணாமாலாக்கப்பட்டதிலிருந்து அது மிகவும் பாரமாக உணர்ந்து கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தனது கணவனுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிந்தால் தனக்கு பாரமாக இருக்கும் குங்குமத்துக்கு விடைகொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்று கூறியதோடு தான் தண்டனை வழங்குவதையோ இழப்பீட்டையோ கோரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த உணர்ச்சிகரமான பகிர்வு போன்று பலர் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரியாதவர்களாக உள்ளனர். வடக்கு,கிழக்கைப் போன்று தெற்கிலும் உள்ளனர்.
ஆகவே அவ்விதமான விடயங்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு காண்பது என்பது மிகக் கடினமான விடயமாக உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் தாமதங்கள் உள்ளன. சில வழக்குகளின் சான்றுப்பொருட்கள் காணாமாலாக்கப்பட்டுள்ளன. முக்கிய ஆவணங்கள் இல்லாது போயுள்ளன. ஆகவே நீதிமன்றங்களின் ஊடாக அந்த விடயங்களை நகர்த்துவது மிகவும் கடினமானதாகும்.
ஆகவே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற சுயாதீனமான கட்டமைப்பை நிறுவுவது பொருத்தமானதாகும். அந்த பொறிமுறையை ஸ்தாபிப்தற்கான அரசியல் இயலுமை அரசியல் தலைவர்களுக்கு காணப்பட வேண்டும். 2015முதல் 2019 வரையில் அவ்விதமான நிலைமைகள் ஆட்சியில் இருந்தாலும் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போதைய ஆட்சியாளர்கள் அரசாங்கத்தின் அத்தகயை குற்றங்களை மையப்படுத்தியே தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பெற்றினார்கள். ஆகவே அவர்கள் தமக்கு கிடைத்த ஆணையை நடைமுறைப்படுத்தும் இயலுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.





