இலங்கையில் பணியாற்றியமை என்வாழ்வில் மிகப்பெரிய கௌரவம்: ஜுலி சங்
77 வருடங்களாக முன்னேற்றம் மற்றும் சவால்களைப் பகிர்ந்துகொண்டு, எமது இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்து வருகின்றது.
இலங்கைக்கான தூதுவராகப் பணியாற்றியது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாகும். 2022 இல் நான் இலங்கைக்கு வந்தபோது, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முன்நோக்கிச் செல்வதில் உறுதியாகவிருந்த ஒரு தேசத்தைக் கண்டேன். இலங்கையில் உண்மையிலேயே ஏதொவொரு அற்புதம் இருக்கின்றது என நாட்டிலிருந்து விடைபெற்றுச்செல்லும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவராகப் பதவி வகித்த ஜுலி சங், அவரது 4 வருட சேவைக்காலம் முடிவடைந்து 16-01-2026 அன்று நாட்டைவிட்டுப் புறப்பட்டார். அதனை முன்னிட்டு அவர் காணொளி வடிவில் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:
நான் கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகவுள்ள சூழ்நிலையில், எமது பெறுபேறுகளை நினைத்து நான் பெருமிதமடைகின்றேன்.
நாடு முழுவதும் வாழும் இலங்கையர்களுடன் இணைந்து நாம் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரப் பிணைப்புகள் மற்றும் அமெரிக்காவையும் இலங்கையையும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றும் பங்காண்மையினை வலுப்படுத்தினோம்.
எமது பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளில் வேரூன்றிய அமெரிக்க - இலங்கை உறவானது இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் இன்றியமையாததாக இருக்கும் என நான் அறிந்திருக்கின்றேன்.
2022 ஆம் ஆண்டு நான் இங்கு வருகைதந்தபோது இலங்கை குறிப்பிடத்தக்கதொரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. இருப்பினும், முன்நோக்கிச் செல்வதில் உறுதியாகவிருந்த ஒரு தேசத்தை நான் கண்டேன். அந்த மிகமுக்கிய தருணத்தில் இலங்கை மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நின்றது. ஸ்திரத்தன்மை, மீட்சி, எதிர்காலத்துக்கான பங்காண்மை ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவு வழங்கியது.
அதுமாத்திரமன்றி இக்காலப்பகுதியில் இருதரப்பு உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவினை நாம் கொண்டாடினோம். அத்தோடு 77 வருடங்களாக முன்னேற்றம் மற்றும் சவால்களைப் பகிர்ந்துகொண்டு, எமது இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்து வருகின்றது.
ஒரு தூதுவராக இங்கு பணியாற்றியது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவங்களில் ஒன்றாகும். பாதுகாப்பினையும், துறைமுக உட்கட்டமைப்பினையும் பலப்படுத்துவது முதல், முக்கிய திட்டங்களுக்கு உதவுவது வரை நாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் இலங்கையுடன் ஒரு பலமான பங்காண்மையினைக் கட்டியெழுப்புவதற்கு உதவியுள்ளன.
இந்த அழகான தீவின் மக்களுக்கு நன்றி. உங்களது கலைகள், கதைகள், மீண்டெழும் தன்மை, உற்சாகம் என்பன எப்போதும் என்னுடன் இருக்கட்டும். நாம் சாதித்த விடயங்களைப் பற்றிய பெருமிதத்துடனும், அடுத்து வருபவை அனைத்தும் நலமாக இருக்கும் எனும் நம்பிக்கையுடனும் நான் விடைபெறுகின்றேன். இலங்கையில் உண்மையிலேயே ஏதொவொரு அற்புதம் இருக்கின்றது. இலங்கைக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.





