காஸா இராணுவ நடவடிக்கைகள் மனித கொடூரத்தின் உச்சம்: இராஜதந்திரி தயான் ஜயதிலக
இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டம் எப்போதும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது.
காஸாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் வெறும் போர் அல்ல, அது மனித கொடூரத்தின் உச்சம். காஸாவில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொடூரங்களை விவரிக்க வேறு எந்த சொல்லும் போதுமானதாக இல்லை என்று இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.
‘ஒரு அதிவல்லரசால் மிதிக்கப்பட்ட தாய் நாட்டின் பாரம்பரியம்’ நூல் வெளியீடு 13-01-2026 அன்று கொழும்பு லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘எகோஸ் ஒப் பலஸ்தீன்’ என்ற தலைப்பின் கீழ் பலஸ்தீன மற்றும் இலங்கைக்கான ஒருமைப்பாட்டு குழு, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பலஸ்தீன் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒவ்வொரு தலைமுறைக்கும் பெரிய ஒழுக்க சவால் இருக்கிறது. எவ்வளவு தொலைவில் இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் ஒருவருக்கொருவருக்கு இருக்கும் கடமைகளையும் அடிப்படை பொறுப்பையும் நினைவூட்டுவது அவசியமாகும்.
காஸாவில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் வெறும் போர் அல்ல, அது ‘மனித கொடூரத்தின்’ உச்சம். காஸாவில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொடூரங்களை விவரிக்க வேறு எந்த சொல்லும் போதுமானதாக இல்லை, இவை நாசிசம் போன்ற வரலாற்றுப் பெரும் கொடுமைகளுக்கு நிகரானதாகும்
இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டம் எப்போதும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்த முந்தைய அரசாங்கங்களின் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலகிச்செல்கிறது.
தற்போதைய சூழலில் இலங்கையில் "சியோனிச ஆதிக்கம்" அதிகரித்து வருவதும், காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்படும் நிலையில் இஸ்ரேலுடன் இலங்கை அமைச்சர்கள் தொடர்புகளைப் பேணுவதும் வருத்தத்திற்குரியது. இது இலங்கையின் நீண்டகால வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.
கொள்கை ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் பலஸ்தீன விடுதலைக்காக இம்தியாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இலங்கை பலஸ்தீனுடன் கொண்டுள்ள நட்புறவும், இம்தியாஸ் அவர்களின் ஈடுபாடும் இணையும் போது, அது ஒரு முழுமையான சிறந்த சங்கமமாகின்றது என்றார்.





