கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்க பொறிமுறை: அமைச்சர் ஹர்ஷன
சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசலைக் குறைப்பதற்கு இந்த குழு இதுவரையில் பரிந்துரை சிபாரிசுகளை முன்வைக்கவில்லை.
சிறைச்சாலையில் காணப்படும் நெரிசலை குறைப்பதற்கு தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக 10 பேரை உள்ளடக்கிய வகையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-01-2026அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசல் குறித்து ஆராய்வதற்கு 2025.03.14 ஆம் திகதியன்று மீளாய்வு முறை நடவடிக்கை ஊடாக தண்டனை காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்கான யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு அமைச்சரவை 2025.06.02 ஆம் திகதி அனுமதி வழங்கி சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு 2025.07.18 ஆம் திகதியன்று முதலாவதாக கூடி விடயங்களை பரிசீலனை செய்தது. இந்த குழுவில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். துரைராசா, பிரதி அமைச்சர் கௌசய்லா ஆரியரத்ன, சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நெரின்புள்ளே, கலாநிதி வசந்தா சுபசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட, வைத்தியர் சிதாரி அபேநாயக்க, நீதியமைச்சின் மேலதிக செயலாளர்களான நிசான் தனசிங்க, பியுமந்த பீரிஸ்,ஹரின் டி ஹெட்டிகே, ஜி.எல். வெலிகல ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற நெரிசலைக் குறைப்பதற்கு இந்த குழு இதுவரையில் பரிந்துரை சிபாரிசுகளை முன்வைக்கவில்லை.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை இல்லாமல் இவர்களுக்கு பிணை வழங்க முடியாது. திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் காணப்படுகிறது. ஆகவே இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு புதிய சேவையாளர்களை இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.





