சட்டமா அதிபர் ஆதரவாக, திணைக்களத்துக்குச் சென்ற சுயாதீன சட்டத்தரணிகள் குழு
அரசாங்கத்தின் சில தரப்பினர் குறிப்பிடுவது போல நீதியமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் எந்தவொரு "டீல்" அரசியல் கலாசாரமும் இல்லை .
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறையின் தீர்மானங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக சுயாதீன சட்டத்தரணிகள் குழுவினர் 21-01-2026 அன்று சட்டமா அதிபரைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
நீதித்துறை செயல்முறைகளில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சட்டத்தரணிகளான பிரேம்நாத் சி. தொலவத்த, மைத்ரி குணரத்ன மற்றும் குணரத்ன வன்னிநாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, சட்டமா அதிபர் அரை- நீதித்துறை அதிகாரத்தைக் கொண்டவர். அவர் எந்தவித பயமுறுத்தல்களும், அழுத்தங்களுமின்றிச் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினரும் சமூக வலைதளங்களும் சட்டமா அதிபருக்குத் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். சமூக ஊடகங்கள் ஊடாக வழக்குகளை விசாரிப்பதும், தீர்ப்பு வழங்குவதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது.
சட்டமா அதிபரின் தீர்மானங்கள் குறித்து எவருக்கேனும் அதிருப்தி இருந்தால் அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தை நாட முடியுமே தவிர, வீதிகளில் இறங்கி நிறுவனங்களை முடக்குவது அராஜகத்திற்கே வழிவகுக்கும். அரசாங்கத்தின் சில தரப்பினர் குறிப்பிடுவது போல நீதியமைச்சருக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் எந்தவொரு "டீல்" அரசியல் கலாசாரமும் இல்லை .
நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சட்டத்தின் மேலாதிக்கத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளார். தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் போன்ற நிறுவனங்களைப் போல நீதித்துறையையும் செயலிழக்கச் செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றார்.





