சொந்த தாயகத்திலேயே ஆதரவற்றவர்களாக பலஸ்தீன் மக்கள்: பலஸ்தீன தூதுவர்
இந்த நூல் பாராளுமன்ற பதிவுகளின் ஒரு தொகுப்பு மட்டுமல்ல, பலஸ்தீன் மற்றும் இலங்கை இரு நாடுகளையும் இணைக்கும் ஒற்றுமைக்கும் சாட்சியமாகத் திகழும் ஒரு சக்திவாய்ந்த ஆவணமாகும்.
பலஸ்தீன மக்கள் தங்களது உயிரைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், உச்சமான தியாக மனப்பான்மையுடன், தங்கள் சொந்த தாயகத்திலேயே ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பலஸ்தீன தூதுவர், இஹாப் எம் காலில் தெரிவித்தார்.
'ஒரு அதிவல்லரசால் மிதிக்கப்பட்ட தாய்நாட்டின் பாரம்பரியம்' நூல் வெளியீடு நேற்று கொழும்பு லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் 13-01-2026 அன்று நடைபெற்றது. இவ்விழாவானது 'எகோஸ் ஒப் பலஸ்தீன்' என்ற தலைப்பின் கீழ் பலஸ்தீன மற்றும் இலங்கைக்கான ஒருமைப்பாட்டு குழு மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பலஸ்தீன் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எழுத்தாளரும், முன்னாள் அமைச்சரும் பலஸ்தீன மற்றும் இலங்கைக்கான ஒருமைப்பாட்டு குழுவின் இணை தலைவருமான இம்தியாஸ் பாகீர் மாக்கார் எழுதிய இந்நூலானது, பலஸ்தீன் மக்களின் பிரச்சினைகளை உலகறிய செய்யும் இலக்கிய வரலாறாக அமைகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களது உயிரைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், உச்சமான தியாக மனப்பான்மையுடன், பலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் அளவற்ற துன்பங்களை அனுபவித்த துயரத்தைப்பற்றி உலகின் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உழைத்து வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த, மேலும் அதற்காகத் தங்கள் உயிரையே கொடுத்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சமர்ப்பணமாக உள்ளது.
உலகில் இன்னும் மீதமுள்ள கடைசி குடியேற்ற நாடாகக் கருதப்படும் பலஸ்தீனை விடுவிக்கும் போராட்டம் கடந்த நூற்றாண்டிலிருந்து இந்த நூற்றாண்டு வரை நீண்டு வருகிறது. பாலஸ்தீன் முகங்கொடுத்துக்கொண்டிருப்பது மிகக் கொடூரமானதும் பயங்கரமானதுமான பேரழிவாகும்.
அந்த வகையில் இந்த நூல் பாராளுமன்ற பதிவுகளின் ஒரு தொகுப்பு மட்டுமல்ல, பலஸ்தீன் மற்றும் இலங்கை இரு நாடுகளையும் இணைக்கும் ஒற்றுமைக்கும் சாட்சியமாகத் திகழும் ஒரு சக்திவாய்ந்த ஆவணமாகும்.
இலங்கையிலும் உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறை செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை நீதிக்கான உலகளாவிய இயக்கத்தில் இணைவதை வலுவாக ஊக்குவிக்கும். வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள பலஸ்தீன் மற்றும் இலங்கைக்கு இடையேயான நட்பு, பரஸ்பர மரியாதையின் பிணைப்பை இது மேலும் வலுப்படுத்துகிறது என்றார்.





