ஜனாதிபதி, அமைச்சரவைக்கு எதிராகஅடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு
கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்திருந்தால், கம்பளை, கலஹா, பேராதனை மற்றும் கண்டி பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய சேதங்களை குறைத்திருக்கலாம் என்று மனுதாரர் குற்றம் சாட்டினார்.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் பாதிப்புகளை குறைக்க அல்லது தடுக்க நடவடிக்கை எடுக்காமை ஊடாக அரசு, தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி கண்டியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி அம்மனுவை எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது. 16-01-2026 அன்று இந்த அடிப்படை உரிமை மீறல் மனு பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆராயப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கண்டி நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகே அலுவலகத்தை நடத்திச் செல்லும் சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையின் உறுப்பினர்கள், தேசிய அனர்த்த முகாமைத்துவ குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தனது சட்டத்தரணி அலுவலகம் கண்டி நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகே அமைந்துள்ளதாகவும், அண்மைய சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக தனது அலுவலகம் முற்றிலும் சேதமடைந்த்துள்லதாகவும் மனுதாரர் இந்த மனு ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனர்த்த பாதிப்பின் விளைவாக, தனது கணினி கட்டமைப்பில் இருந்த பல முக்கியமான தரவுகள் அழிவடைந்து விட்டதாகவும், இதனால் தனது தொழில் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் இம்மனு ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பிரதிவாதிகள் அலட்சியம் அல்லது கடமை தவறியமை ஊடாக எடுக்காததால் இத்தகைய பேரழிவு நிலைமை ஏற்பட்டதாகவும், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், குரிப்பிடத்தக்க அளவு சேதங்களைக் குறைத்திருக்க முடியும் என்றும் மனுதாரர் மனு ஊடாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்திருந்தால், கம்பளை, கலஹா, பேராதனை மற்றும் கண்டி பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய சேதங்களை குறைத்திருக்கலாம் என்று மனுதாரர் குற்றம் சாட்டினார்.
பிரதிவாதிகளின் அலட்சியம் இந்த அனர்த்தத்தால் ஏற்பட்ட பேரழிவை அதிகப்படுத்தியது என்று மனுதாரரான சட்டத்தரணி மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிரதிவாதிகளின் அலட்சியம் காரணமாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார். இந்த மனு தொடர்பில் மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய ஆஜரானார்.





