திருக்கோணமலை கடற்கரையில் புத்தர் சிலை: பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்
சுமார் நூறுக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
திருக்கோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டிடம் ஒன்றை அமைத்து அதில் புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருக்கோணமலை போத்திராஜ விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட 4 தேரர்கள் மற்றும் 5 சிவிலியன்கள் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று 19 உத்தரவிட்டது.
நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதிவான் முகமத் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக திருக்கோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
சுமார் நூறுக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அத்துடன் நேற்றைய தினம் வழக்கு விசாரணைகளை பார்வையிட ஏராளமான பௌத்த தேரர்களும் நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முறைப்பாட்டாளர் தரப்புடன் சமரசம் ஒன்று எட்டப்பட்டிருப்பதாக விடயங்களை முன்வைத்தனர். குறிப்பாக இந்த வழக்கில் 4 தேரர்கள் உள்ளிட்ட 9 சந்தேகநபர்களுக்கும் எதிராக தண்டனை சட்ட கோவையின் கீழான குற்றங்களுக்கு மேலதிகமாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ சட்டத்தின் 14 மற்றும் 28 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





