பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு - மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு அமைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகப் பதிலீடு செய்வதற்கு இலங்கை இணங்கியது.
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் இருப்பதையொத்த மிகமோசமாக கூறுகள் உள்ளடக்கியிருப்பதுடன், அது ஒடுக்குமுறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய தன்மையையும் கொண்டிருக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் புதிய வரைவானது, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் இருப்பதையொத்த மிகமோசமாக கூறுகளை உள்ளடக்கியிருப்பதுடன், ஒடுக்குமுறைகளுக்கு இடமளிக்கக்கூடிய அச்சுறுத்தலையும் கொண்டிருக்கிறது. இந்த சட்டவரைவு ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் வரையறுக்கப்பட்டுள்ள நியமங்களுக்கோ அல்லது சர்வதேச மனித உரிமைகள்சார் கடப்பாடுகளுக்கோ அல்லது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளித்திருக்கும் வாக்குறுதிகளுக்கோ ஏற்புடையவாறு அமையவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு அமைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாகப் பதிலீடு செய்வதற்கு இலங்கை இணங்கியது. ஆனாலும் அதன் பின்னரான காலப்பகுதியில் தற்போதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அக்கடப்பாட்டை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை முற்றாக நீக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவானது இவ்வாக்குறுதிக்கு முரணானதாகவே அமைந்திருக்கின்றது.
மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியே இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கையில், இந்தப் புதிய வரைவானது அதிகாரிகளால் முன்னைய மீறல்கள் நிகழ்த்தப்படுவதற்கு இடமளிக்கக்கூடிய சரத்துக்களைக் கொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்துவதுடன், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய புதிய வரைபைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.





