பாடாசலையில் ஊடக கல்வியை பரந்துபட்டதாக மாற்றவேண்டும்: விஜயானந்த ஜயவீர
குறித்த உரையாடலில் டிஜிட்டல் ஊடகம், அதுசார்ந்த அறிவு திறன்கள் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடசாலையில் ஊடக கல்வியை பரந்து பட்டதாக்குவதன் ஊடாக சமூக மட்டத்தில் ஊடகவிலாளர்களின் பணிகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான பாரிய புரிதலை உருவாக்க முடியும் என்று விஜயானந்த ஜயவீர தெரிவித்தார்.
இலங்கை இதழியற் கல்லூரியில் 19-01-2026 அன்று சுதந்திர ஊடக இயக்கம், சுதந்திர ஊடக தொழிற்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த 'கறுப்பு ஜனவரி இன்னமும் இருட்டாகவே உள்ளது' எனும் தொனிப்பொருளிலான கறுப்பு ஜனவரி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் எமக்காக பணியாற்றியதால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் சமூகத்தில் எந்தளவுக்கு ஆழமாகச் சென்றுள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஊடகங்கள் என்ன செய்கின்றன, ஊடகவியலாளர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது சமூகத்திற்குள் ஆழமாகச் செல்வதன் ஊடாகத்தான் அதுபற்றி உரையாடல்கள் மேலெழுக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது கல்விச் சீர்திருத்தம் பற்றிய உரையாடல்கள் நடைபெறுகின்றன.
அந்த உரையடல்களில் மிக முக்கியமாக ஊடகக் கற்கை சம்பந்தமாக உரையாடப்படுகின்றது. குறித்த உரையாடலில் டிஜிட்டல் ஊடகம், அதுசார்ந்த அறிவு திறன்கள் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆனால் எந்தளவுக்கு அந்த விடயங்கள் பாடசாலை மட்டங்களில் பேசப்படுகின்றன என்பது பெருங்கேள்வியான விடயமாகும். ஆகவே ஊடகவியல் கல்வி பாடசாலைமட்டத்தில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பரந்துபட்டதாக மாற்றப்பட வேண்டும். அதற்கான உரையாடல்களை தற்போது ஆரம்பிப்பது பொருத்தமானதாகும். அப்போது தான் ஊடகங்கள் சமூகத்துக்காக எத்தகையை பணியை ஆற்றுகின்றன. ஊடகவியலாளர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பிலான ஒரு புரிதல் ஏற்படும் என்றார்.





