பிரதமருக்கு எதிராக சதி: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி திட்டத்தை முன்னெடுக்க பாடசாலைகளில் ஸ்மாட் பலகை கொள்வனவு செய்ய மாணவர்களிடம் பணம் அறவிடப்படுகிறது.
பிரதமர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிராக கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக கொண்டுவருமாறு அரசாங்கம் தெரிவிப்பது, அவருக்கு எதிரான சதித்திட்டமாக இருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-01-2026அன்று இடம்பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தரம் 1 மற்றும் 6ஆம் வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்த வேண்டாம் என நாங்கள் தெரிவிக்கவில்லை. நீங்கள் தயாரித்த கல்வி மறுசீரமைப்பின் ஆங்கில பாடத்தொகுப்பில் மாணவர்களுக்கு படிப்பதற்கு ஆபாச வலைத்தலம் ஒன்றை நுழைத்திருக்கிறது. அதனையும் நாங்களா செய்தோம். அதனை உங்களது அதிகாரிகளே செய்தார்கள். தரம் 1 மற்றும் 6ஆம் வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை.
அதேநேரம் தரம் 6ஆம் வகுப்புக்கான பாடத்தொகுப்பின் ஆங்கில பாடத்தாெகுப்பில் ஆபாச வலைத்தலம் ஒன்று உள்வாங்கப்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களை பயிற்றுவித்தல் பூரணப்படுத்தப்படாமல் இருப்பதாலும் இன்னும் சில தொழிநுட்ப கோளாறுகள் இருப்பதால், அவற்றை சரி செய்யும் வரை 6ஆம் ஆண்டுக்கான கல்வி மறுசீரமைப்பை ஒருவருடத்துக்கு பிற்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதனால் கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவதை நாங்கள் பிற்படுத்தவில்லை. உங்களது ஜனாதிபதியே பிற்படுத்தி இருக்கிறார். இந்த வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்குமாறே நாங்கள் தெரிவித்தோம்.
ஆபாச வலைத்தலம் பதிவிடப்பட்ட புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்ததோ என எங்களுக்கு தெரியாது. அது உங்களது தனிப்பட்ட விடயமாக இருக்கலாம். என்றாலும் அது நாட்டின் அரச கொள்கையாக இருக்க முடியாது. சர்ச்சைக்குரிய வலைத்தலம் பாடத்தொகுப்பில் நுழைவிக்கப்பட்டுளளமை தொடர்பில் சமூகத்தில் அதற்கு எதிராக எழுந்த எதிிர்ப்பு காரணமாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை பிற்படுத்த தீர்மானித்தது.
அது மாத்திரமல்லாது, அரசாங்கம் இந்த ஆபாச வலைத்தலம் பதிவிடப்பட்ட புத்தகத்தை அச்சிட்டு, அதனை விநியோகித்து தவறு செய்துவிட்டு, அந்த தவறை எதிர்க்கட்சியின் மேல் சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதேநேரம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் வழிமுறை அரசியலமைப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அது அரசாங்கத்தின் தற்றுணிவின் பேரில் திகதி நிர்ணயிக்கும் வேலை அல்ல. கல்வி அமைச்சராக பிரதமர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், அவருக்கு பதில் வழங்க முடியாத வகையில், விரைவாக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறதோ என எங்களுக்கு தெரியாது. பிரதமர் வெள்ளிக்கிழமையே நாட்டுக்கு வர இருக்கிறார். அதனாலே வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து விவாதிக்க தயார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இது பிரதமருக்கு எதிரான சதித்திட்டமோ என்ற சந்தேகம் எழுகிறது.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி திட்டத்தை முன்னெடுக்க பாடசாலைகளில் ஸ்மாட் பலகை கொள்வனவு செய்ய மாணவர்களிடம் பணம் அறவிடப்படுகிறது. ராேயல் கல்லூரியில் இவ்வாறு பணம் அறவிடப்பட்டுள்ளது. அதேபோன்று பணம் அறவிடுமாறு பெற்றோர்களுக்கு வேறு சில பாடசாலைகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் கல்வி மறுசீரமைப்பில் பிரச்சினை இல்லை. கல்வி மறுசீரமைப்பை உங்களுக்கு முன்னர் நாங்களே கொண்டுவந்தோம். பாடசாலைகளுக்கு நாங்கள் ஸ்மாட் பலகை வழங்கும்போது நீங்கள் சிரித்தீர்கள், தற்போது அரசாங்கம் தங்களது தவறை மறைத்துக்கொள்வதற்காக, பிரதமர் தனது இயலாமையை மறைத்துக்கொள்வதற்காக தற்போது பெற்றோர்கள் சிலரை வீதிக்கிறக்கி, கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்து வருகிறார்கள். மறுசீரமைப்பை நிறுத்தியது நீங்களாகும். அதனால் சமூகவலைத்தலங்களில் பொய் பிரசாரம் மேற்கொண்டு பொய்யை சமூகமயமாக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அதனால் கல்வி மறுசீரமைப்புக்கு நாங்கள் ஆதரவளிப்போம். ஆனால் கல்வியை ஆபாசமாக்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.





