பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு கடும் கண்டனம்
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு, 'ஆறாம் தரத்துக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பிழையே இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருப்பெற்றிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக பாலின அடிப்படையிலும், தனிப்பட்ட ரீதியிலும் நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்திருக்கும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு, இவ்வாறான தாக்குதல்களால் அரசியல் வன்முறைகளுக்கு வழிவகுக்குமே தவிர, அவை சட்டபூர்வ கருத்து வெளிப்பாடாக ஒருபோதும் அமையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய சில வாரங்களாக பிரதமருக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடக சந்திப்புக்களிலும், பொதுமேடைகளிலும் நிகழ்த்தப்பட்டுவரும் தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு, 'ஆறாம் தரத்துக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பிழையே இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருப்பெற்றிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் ஆட்சி நிர்வாகத்தின் மீதான நியாயமான விமர்சனங்களாகவன்றி, பிரதமரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கிலான முன்வைக்கப்படும் மிக கீழ்த்தரமான விமர்சனங்களாக மாறியிருப்பதாகவும் அக்கூட்டிணைவு தெரிவித்துள்ளது.
'ஆண்களை விடவும் அரசியலில் ஈடுபடும் பெண்கள் பெருமளவுக்கு இவ்வாறான மிகமோசமான தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவதுடன், இது எமது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாலின சமத்துவமின்மையையும், மிகமோசமான அரசியல் கலாசாரத்தையுமே பிரதிபலிக்கின்றது. அதுமாத்திரமன்றி சில அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் நிகழ்த்தப்படும் இவ்வாறான மிகமோசமான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அவற்றை முறையாக நிர்வகிப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையானது, இவ்வாறான தனிப்பட்ட தாக்குதல்கள் சுதந்திரமாக நிகழ்த்தப்படுவதற்கு இடமளிக்கின்றது' எனவும் அக்கூட்டிணைவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஜனநாயக சமூகத்தில் தனிப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கோ அல்லது பாலின அடிப்படையிலான அவமதிப்புகளுக்கோ இடமிருக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பு, பெண் தலைமைத்துவம் தொடர்பில் மாத்திரம் மாறுபட்ட நியமங்களைப் பின்பற்றுவது ஜனநாயகக் கோட்பாடுகளைப் பெரிதும் வலுவிழக்கச்செய்யும் என எச்சரித்துள்ளது.





