பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுப்பு: விஜேதாச ராஜபக்ஷ
மக்களுக்காக சட்டம் இயற்றப்படும் போது மக்களின் கருத்துக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். திமிரும், பிடிவாதமும், வெறுப்பும் இருந்தால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற மேற்கத்தேய நாடுகளில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி வழங்குவதை தடை செய்யும் சட்டங்களை இயற்றி வருகின்றன. அதன் தீய விளைவுகளை அவர்கள் அனுபவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் எமது நாட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனாலும் அவரால் ஆட்சியில் நீடிக்க முடியாது போனது. தற்போதைய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாயையாகும். இதில் உண்மையான சீர்திருத்தம் எதுவும் இல்லை. பாடத்திட்டத்தை சற்று மாற்றி, அதை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது மட்டுமே சீர்திருத்தமாகாது. இத்தகைய சில்லறை வேலைகளை சீர்திருத்தம் என்று அழைக்க முடியாது.
இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரிடமும் நவீன கையடக்க தொலைபேசிகள் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லை. ஒருவேளை உணவிற்கே வழியில்லாத குடும்பங்கள் இருக்கும்போது, நவீன கையடக்க வாங்குவது எப்படி சாத்தியம்?
மேற்கத்தேய நாடுகளான அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்றவை 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்குவதை தடை செய்யும் சட்டங்களை இயற்றி வருகின்றன. அதன் தீய விளைவுகளை அவர்கள் அனுபவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் எமது நாட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் கல்வி சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எமக்கு அரசாங்கத்தின் மீது கோபமோ, வெறுப்போ அல்லது பொறாமையோ இல்லை. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமும் இல்லை. சரியானதைச் செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவே விரும்புகிறோம். எனது கருத்துப்படி, ஜனாதிபதி கல்வி சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முன்னதாக, அரசாங்கத்தைத் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
இலங்கையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இதற்கு எதிராக உள்ளனர். இது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அல்ல, மாறாகத் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான எதிர்ப்பாகும். மக்கள் எவ்வளவு கூறினாலும் 'நாங்கள் செய்தே தீருவோம்' என்று அரசாங்கம் பிடிவாதமாக இருந்தால், அந்த நாட்டுக்கு தெய்வத்தின் துணை தான் தேவை.
நாங்கள் சட்டங்களை உருவாக்கும்போது அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்தோம். மகா நாயக்க தேரர்கள், பேராயர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்தோம். மக்களுக்காக சட்டம் இயற்றப்படும் போது மக்களின் கருத்துக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். திமிரும், பிடிவாதமும், வெறுப்பும் இருந்தால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
தமிழ் நாட்டில் கடந்த 31 ஆண்டுகளாக, யாராவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டுமானால், கச்சத்தீவை மீட்டுத் தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறார்கள். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களின்படி அவ்வாறு பெற்றுக்கொள்ள முடியாது. அதை மீட்க வேண்டுமானால் டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் செய்யும் முறையற்ற செயல்களைப் போலத்தான் செய்ய வேண்டியிருக்கும் என்றார்.





