பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துங்கள்: சர்வதேச மன்னிப்புச்சபை
தமிழ்ச்சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமையவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியன் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது.
இலங்கையில் ஆயுதமோதலின்போதும், அதன் பின்னரும் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வெறுமனே தற்செயலாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்கள் அல்ல எனவும், மாறாக அவை வேண்டுமென்றே பரந்துபட்ட ரீதியில் நிகழ்த்தப்பட்ட முறையாகக் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளின் ஓரங்கமாகும் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இம்மீறல்கள் தகவல்களைத் திரட்டுவதற்கும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஒடுக்குவதற்கும், பரவலான அச்ச மற்றும் அவமான உணர்வை வேரூன்றச் செய்வதற்குமான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான தூண்டுதலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கை வழங்கவேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங்கினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் முக்கிய அறிக்கையானது, இதற்கு முன்னைய ஐ.நாவின் விசாரணைகள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட ஆயுதமோதல் இடம்பெற்ற காலத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன், கடந்த 2024 ஆம் ஆண்டு அறிக்கையிடப்பட்ட சம்பவங்களையும் உள்வாங்கியுள்ளது.
இந்த அறிக்கையானது மோதல்கால பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு விடுக்கும் தெளிவான அழைப்பாக அமையவேண்டும்.
அதேபோன்று தமிழ்ச்சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் வேண்டுமென்றே, பரந்துபட்டளவில், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்ற யாவரும் அறிந்த உண்மை இவ்வறிக்கையில் மீளுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இவற்றில் சில சம்பவங்களை போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப்படுத்தமுடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவரல் மற்றும் உண்மை, நீதி, இழப்பீட்டை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாக இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





