யுத்த குற்றவாளிகள் தப்பிக்கும் போக்கு தொடர்கிறது: ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர்
2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படாமையானது, இம்மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் கரிசனை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டுவந்த இலங்கையில் மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றிய 'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான 30 பக்க விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையில் மோதலின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் இன்னமும் பெருமளவுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக இம்மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதி கிட்டும் என்ற நம்பிக்கையைக்கூட இழந்துவிட்டோம்' எனும் தலைப்பிலான இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தினால் ஒரு தசாப்தகாலமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல்களை அடிப்படையாகக்கொண்டு, மீறல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள், பாலின அடிப்படையிலான மீறல்கள் தொடர்பான உள்நாட்டு நிபுணர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதாகும்.
அவ்வறிக்கையில் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும், இவ்விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குமான கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அந்த உண்மையை அங்கீகரித்தல் மற்றும் இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படாமையானது, இம்மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தைத் தோற்றுவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மோதலினால் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் நாற்பட்ட உடலியல் உபாதைகள், உளவியல் தாக்கங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களின்படி மோதல்களின் போதான பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குவதற்குமான சட்டக்கடப்பாடு இலங்கைக்கு இருக்கிறது என வலியுறுத்தியுள்ளார்.





