வடக்கில் போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாட்டை குடும்பங்களிலிருந்து ஆரம்பியுங்கள்: ஜனாதிபதி அநுர
போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு அரச நிர்வாகத்தில் இருக்க முடியாது.
வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் ஒரு காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்தார்கள். பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவலையுடனும், சந்தேகத்துடனும் வாழ்ந்தார்கள். யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்தில் வடக்கு மாகாணம் கட்டம் கட்டமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துக்கு ஆக்கிரமிக்கப்பட்டது. பொலிஸாருக்கு தைரியமாக தகவல்களை வழங்குங்கள். போதைப்பொருள் ஒழிப்பை குடும்பத்தில் இருந்து ஆரம்பியுங்கள். அழகான நாட்டை எம்மால் உருவாக்க முடியுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் 16-01-2026 அன்று நடைபெற்ற நச்சு போதைப்பொருட்களுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய கருத்திட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, முழு சமூக கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பது அரசாங்கத்தில் பிரதான நோக்கமாகும்.தமது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இருப்பினும் பெற்றோரின் நம்பிக்கையை அழிக்கும் வகையில் தான் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை காணப்படுகிறது.
போதைப்பொருள் வர்;த்தகத்தில் ஒருசில அரச அதிகாரிகள், ஒருசில பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு அடிமையாகியுள்ளார்கள். இதனை தற்போது நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம்.ஒருசில அரச அதிகாரிகளை கைது செய்துள்ளோம்.
இதுவரை காலமும் அரசியல் அனுசரணையுடன் தான் போதைப்பொருள் விநியோகம் மற்றும் வர்த்தகம் காணப்பட்டது.இனியொரும் போதும் இவ்வாறான நிலை ஏற்படாது. பிரதான அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எமது அரசாங்கத்தில் எவரும் போதைப்பொருள் வர்த்தகத்துடனோ, பாதாளக் குழுக்களுடனோ தொடர்புப்பட்டிருக்கவில்லை. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில அதிகாரிகள் இன்றும் பழைய பழக்கத்திலேயே உள்ளார்கள். ஒன்று போதைப்பொருள் கொடுக்கல் வாங்களில் இருந்து விலக வேண்டும்.அல்லது கடமையில் இருந்து விலக வேண்டும்.
போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு அரச நிர்வாகத்தில் இருக்க முடியாது. பெரும்பாலான பொலிஸார் சிறந்த முறையில் தமக்குரிய கடமைகளை ஆற்றுகிறார்கள். ஆனால் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸாரினால் ஒட்டுமொத்த பொலிஸ் சேவைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே எவ்வித பின்னடைவும் இல்லாமல் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்க பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறான நிலை கிடையாது. ஆகவே பொதுமக்களும் போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் ஒரு காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை தொலைத்தார்கள்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவலையுடனும், சந்தேகத்துடனும் வாழ்ந்தார்கள். யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்தில் வடக்கு மாகாணம் கட்டம் கட்டமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துக்கு ஆக்கிரமிக்கப்பட்டது.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸாருக்கு தைரியமாக தகவல்களை வழங்குங்கள். போதைப்பொருள் ஒழிப்பை குடும்பத்தில் இருந்து ஆரம்பியுங்கள். அழகான நாட்டை எம்மால் உருவாக்க முடியும் என்றார்.





