13 நாட்களில் 106.6 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய சுங்கம்
2025 ஆம் ஆண்டில், இலங்கை சுங்க திணைக்களம் 2,551 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்தது.
சுங்க திணைக்களம் 2026ஆம் ஆண்டின் முதல் வாரங்களில் வலுவான வருமானப் பதிவைப் பெற்றுள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 106.6 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது அந்த மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட 160.2 பில்லியன் ரூபா இலக்கில் 66 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.
கடந்த நவம்பர் மாதம் தித்வா சூறாவளி காரணமாக குறைந்தது நான்கு நாட்களுக்குச் செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகரித்த இறக்குமதி அளவுகளுக்கு மத்தியில், கடந்த மாதம் முதல் கொள்கலன் விடுவிப்புப் பணிகளைத் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில், இலங்கை சுங்க திணைக்களம் 2,551 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்தது. இது திருத்தப்பட்ட வருடாந்த இலக்கான 2,241 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும். அத்துடன், அதற்கு முந்தைய ஆண்டின் 1,553 பில்லியன் ரூபா வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 64.2 சதவீத வளர்ச்சியாகும்.
வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதால், 2026 ஆம் ஆண்டிற்கான சுங்க வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் குறைவானதாகும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





