1.9 மில்லியன் குடும்பங்கள் அரச நிவாரணங்களைப் பெறுகின்றன: அமைச்சர் உபாலி பன்னிலகே
சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 லிருந்து 70,000 ஆக அதிகரித்துள்ளது
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், சுமார் குறைந்த வருமானம் கொண்ட 1.9 மில்லியன் குடும்பங்கள் அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்று வருவதுடன் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆக அதிகரித்துள்ளது என சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-01-2026 அன்று இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், சுமார் குறைந்த வருமானம் கொண்ட 1.9 மில்லியன் குடும்பங்கள் அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்று வருகின்றன. பயனாளிகளில் நான்கு பிரிவுகள் உள்ளன. முதலில் மிகவும் ஏழ்மையான பிரிவினர் அவர்களின் மாதாந்த உதவித்தொகை 15,000 ரூபா விலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
இரண்டாவது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர். அவர்களின் மாதாந்த உதவித்தொகை 8,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இடைநிலை பிரிவினருக்கு மாதத்திற்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களுக்கான நிவாரண காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சமூகத்தில் வாத விவாதங்கள் காணப்படுகின்றன. பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க சமூக நலன்புரி சபை ஆறு முக்கிய அளவுகோல்களையும் 22 துணை அளவுகோல்களையும் பயன்படுத்துகிறது. மேலும் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 லிருந்து 70,000 ஆக அதிகரித்துள்ளது
அதேவேளை நாட்டில் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்தொகை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.





