வேறுபாடுகளை கடந்து மனிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்: கரு ஜயசூரிய
பலஸ்தீனத்தின் நிலைமையை நோக்கும்போது அது பலஸ்தீனத்தை மட்டுமல்லாமல் உலகளாவிய நீதி நிலைமையையே காட்டுகின்றது.
வேறுபாடுகளுக்காக ஒருவரை நாம் வெறுத்து கொண்டே இருக்க கூடாது மாறாக வேறுபாடுகளை கடந்த மனிதத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
‘ஒரு அதிவல்லரசால் மிதிக்கப்பட்ட தாய் நாட்டின் பாரம்பரியம்’ நூல் வெளியீடு 13-01-2026 அன்று கொழும்பு லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘எகோஸ் ஒப் பலஸ்தீன்’ என்ற தலைப்பின் கீழ் பலஸ்தீன மற்றும் இலங்கைக்கான ஒருமைப்பாட்டு குழு, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பலஸ்தீன் தூதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பலஸ்தீனத்தின் நிலைமையை நோக்கும்போது அது பலஸ்தீனத்தை மட்டுமல்லாமல் உலகளாவிய நீதி நிலைமையையே காட்டுகின்றது. அதிகாரமானது பொதுக்கொள்கைகளை விட மேலாக செயற்படும் போது சாதாரண மக்கள் தனது தலையீடு இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கான விளைவுகளை சந்திக்க நேருகின்றது.
நாம் எவரும் தாய், தந்தை, மதம், நாடு, மொழி என்று எதனையும் தெரிவு செய்து பிறக்கவில்லை. இது எதுவும் சாதனை அல்ல, சந்தர்ப்ப ரீதியாக அமைந்த ஒரு விடயமாகும். இவ்வாறான வேறுபாடுகளுக்காக ஒருவரை நாம் வெறுத்து கொண்டே இருக்க கூடாது மாறாக இவ்வாறான வேறுபாடுகளை கடந்து மனிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இப்புத்தகம் மிக முக்கியமானதும் தேவையானதும் ஒன்றாகும் என்றார்.





