கஜேந்திரகுமார், சாணக்கியனுக்கு ஆளும் தரப்பு எம்.பி நஜித் நன்றி
ஆறாம் தரம் ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறு பூசல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கட்சியில் பதவி உயர்வு வழங்கியுள்ளார். மாறுபட்ட அரசியல் கொள்கை காணப்பட்டாலும் பிரதமருக்கு எதிரான மோசமான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் உட்பட தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-01-2026அன்று நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய கல்வி மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்கள் தான் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். புதிய கல்வி மறுசீரமைப்பில் வரலாறு மற்றும் அழகியற்கலை பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்கள். சபையில் வந்து ஆடாமல் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
ஆறாம் தரம் ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடப்புத்தகத்தில் முகப்பு அட்டையில் பல நிறங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது தன்பாலினம் பற்றி எண்ணம் தோன்றுகிறது என்றும் எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இவர்களின் உளவியலை பரிசோதிக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிராக மிக மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். பெண் என்று கருதாமல் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையிலும் பிரதமரை கடுமையாக விமர்சித்தார்கள். பிரதமருக்கு எதிராக தேங்காய் உடைத்தவர்கள், கீழ்த்தரமான வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட வகையில் மிக மோசமான விமர்சனங்களை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் மாறுப்பட்ட அரசியல் கொள்கை காணப்பட்டாலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் உட்பட தமிழ் அரசியல் தரப்பினர் பிரதமருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





