யாழ். இந்துக் கல்லூரியில் சிவலிங்கத்தை அகற்றிய வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு
உயர்நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் விவாதத்திற்கு 03.07.2026 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தை, தற்போதைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபரினால் அகற்றப்பட்டதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுதாரர்களால் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இலங்கை அரசியலமைப்பு உறுப்புரைகள் 10,12(1),12(2),14(1)(e),14(1)(f) க்கு எதிராக முதலாம் எதிர்மனுதாரர் (அதிபர்) மீறியுள்ளார் என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் 23.01.2026ம் திகதியன்று பிரதம நீதியரசர் மாண்புமிகு பத்மன் சூரசேன மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களான மாண்புமிகு அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர அவர்கள் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயர்நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
இந்த வழக்கின் விடயப்பொருள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2018ம் ஆண்டு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம், தற்போதைய அதிபரால் அகற்றப்பட்டதும், பின்னர் அதனை மீண்டும் வேறொரு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுத்தது அடிப்படை உரிமை மீறல் செயற்பாடு என்ற அடிப்படையிலே மனுதாரர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் விவாதத்திற்கு 03.07.2026 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ். கணேஷராஜன் உடன் சட்டத்தரணி விதுஷா லோகநாதன் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் அவர்களின் அனுசணையுடன் ஆஜர் ஆனார்கள். முதலாவது எதிர்மனுதாரர் சார்பில் கலாநிதி குருபரன் சட்டத்தரணி அவர்கள் ஆஜர் ஆனார்கள். இரண்டாவது முதல் ஏழாவது எதிர்மனுதாரர்கள் சார்பில் சட்டமா அதிபர் அவர்கள் ஆஜர் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





