மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிரணிக்குள் கலந்துரையாடல்
அப்பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாணசபைத் தேர்தல்களை வெகுவிரைவில் இலகுவாக நடத்த முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கான முன்மொழியப்பட்டுள்ள எதிரணியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நிசாம் காரியப்பர், மனோ கணேசன் , சாணக்கியன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் நிகழ்நிலை முறைமையில் 24-01-2026அன்று சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையில் உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சகல திருத்தங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாணசபைத் தேர்தல்களை வெகுவிரைவில் இலகுவாக நடாத்த முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
மாகாணசபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது குறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் மூன்றுமாத காலவகாசம் வழங்கப்பட்ட 12 பேர் அடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அதன்படி ஆளும் தரப்பில் இருந்து 08 பேரும், எதிர்தரப்பில் இருந்து 04 பேரும் என மொத்தமாக 12 பேர் அடங்கிய இத்தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரின் பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் சபாநாயகருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் தன்னால் ஏற்கெனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை, அதில் மேற்கொள்ளப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள், அதற்கமைய அப்பிரேரணையில் தாம் மேற்கொண்ட திருத்தங்கள் என சகல விடயங்களையும் உள்ளடக்கி தயாரித்திருந்த ஆவணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பரிடம் கையளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் பாராளுமன்;றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்து நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி ஊடாக விளக்கமளித்த சுமந்திரன், நேற்று முன்தினம் மாலை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ரஞ்சித் மத்தும பண்டார, நிசாம் காரியப்பர், மனோ கணேசன் மற்றும் சாணக்கியன் ஆகியோருடன் நிகழ்நிலை முறைமையில் சந்திப்பொன்றை நடாத்தினார்.
இச்சந்திப்பின் போது சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையில் உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சகல திருத்தங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் எனவே அப்பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாணசபைத் தேர்தல்களை வெகுவிரைவில் இலகுவாக நடத்த முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தெரிவுக்குழு கூடும்வேளையில் இவ்விடயத்தை எதிரணியின் உறுப்பினர்கள் ஏகமனதாக வலியுறுத்துவது பெரிதும் சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.





