சமூக சக்தி கிராமத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பு: ஜனாதிபதியின் செயலாளர்
இந்த திட்டங்களை முன்னோக்கி செயல்படுத்த புதிய டிஜிட்டல் கட்டமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் வறுமையை ஒழிப்பதற்கான முக்கியமான அபிவிருத்தித் திட்டம் சமூக சக்தி தேசிய செயற்பாடு என்று, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக சக்தி தேசிய செயற்பாடு, தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த திட்டங்களை முன்னோக்கி செயல்படுத்த புதிய டிஜிட்டல் கட்டமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பணியாற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு சமூக சக்தி தேசிய வேலைத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கிராமிய அபிவிருத்திக்காக சுமார் 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, அந்த நிதிகளைப் பயன்படுத்துவதில் கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்ட சமூக அபிவிருத்தி சபைகளுக்கு தனித்துவமான வகிபாகம் உள்ளது.
இந்த பணிகள் அனைத்தையும் அதிகபட்ச செயல்திறனுடனும், வினைத்திறனுடனும் செயல்படுத்துவதில் பிரதேச செயலகப் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்களுக்கு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.





