மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான படிமுறைகளை முன்னெடுப்பது அவசியம்: சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர்
அனுபவப்பகிர்வு என்ற அடிப்படையிலேயே சுவிட்சர்லாந்து இலங்கையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளுர் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும், அறிவார்ந்த அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் ஆதரவளிக்கிறது.
பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. ஆகவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அவசியமான படிமுறைகளை முன்னெடுப்பது முக்கிய நடவடிக்கையாகும் என்று இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகர் கலாநிதி சிறி வோல்ட் வலியுறுத்தினார்.
அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான புதிய சட்டங்களை இலங்கை பரிசீலித்து வரும் நிலையில், அத்தகைய சட்டக்கட்டமைப்புகள் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் 24-01-2026அன்று ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கான கல்வி நிறுவனத்தில் 'ஜனநாயகம் மற்றும் உள்ளுராட்சி நிர்வாகம்' மற்றும் 'பாராளுமன்ற நிர்வாகம்' தொடர்பிலான நிறைவேற்றுக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு முன்னாள் சபாநாயகரும், நிறுவனத்தின் ஸ்தாபகருமான கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் அடித்தளத்தை வலுப்படுத்தும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கற்கை நெறியை விசேடமாக பூர்த்தி செய்ததையிட்டு வாழ்த்துவதோடு அதிகளவிலான பெண்களையும் இங்கே காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நீண்டகாலமாக ஒழுக்கமான தலைமைத்துவம், பிரஜைகளுக்கான கல்வி மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் கரு ஜயசூரியவின் முயற்சிக்கு ஆதரவளிப்பதில் சுவிட்சர்லாந்து பெருமை கொள்கிறது.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அரசியல் மற்றும் நிறுவன மாற்றங்களின் போது, கொள்கை ரீதியான தலைமைத்துவமும் திறமையான நிர்வாகமும் மிகவும் அவசியமாகும். இத்தகைய பயிற்சித் திட்டங்கள் அந்த அடித்தளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதிலும், மக்களின் பல்வேறு அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பாராளுமன்றம் தனித்துவமான பொறுப்பைக் கொண்டுள்ளது. தொழில்முறை மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்கான உங்கள் அர்ப்பணிப்பு அந்த நிறுவனத்தையும், அதன் மூலம் நாட்டையும் வலுப்படுத்துகிறது. ஆந்த வகையில் பாராளுமன்ற நிர்வாகக் கற்கையை பூர்த்தி செய்துள்ள நீங்கள் உண்மையில் ஒரு இயங்கும் ஜனநாயகத்தின் மையமாகவும் இதயமாகவும் இருக்கிறீர்கள்.
அதேபோல், உள்ளூராட்சி நிர்வாகத்தில் நிறைவேற்று சான்றிதழ் பாடநெறியும் முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளுர் அதிகார சபைகள் நாட்டிற்கும் மக்களுக்கும் இடையிலான நேரடித்தொடர்பை உருவாக்குகின்றன. அவை திறம்படச் செயற்படும்போது பொதுமக்களின் நம்பிக்கை வளர்கிறது. அவை தடுமாறும்போது நம்பிக்கை சிதைகிறது.
வலுவான உள்ளுராட்சி நிர்வாகமே பதிலளிக்கக்கூடிய ஜனநாயகத்தின் அடித்தளமாகும். சுவிட்சர்லாந்தின் பார்வையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பதில் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளின் பங்கு முக்கியமானது. அவர்கள் மக்களுக்கு நெருக்கமானவர்கள்.
இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பின் மூன்றாவது தூணான மாகாண சபை முறையின் முக்கியத்துவத்தை நான் சுருக்கமாக நினைவுகூர விரும்புகிறேன். நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து, மாகாண சபைகள் நிர்வாகத்தைப் பிராந்தியங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதற்கும் பல்வேறு சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு ரீதியான நிர்வாக அமைப்பாகும்.
தற்போது, நீங்கள் நன்கு அறிந்தபடி, பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால் மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு அவசியமான படிமுறைகளை முன்னெடுப்பது முக்கிய நடவடிக்கையாகும்.
அதேவேளையில், ஒரு முழுமையான ஜனநாயகம் என்பது வலுவான நிறுவனங்களை மட்டுமல்லாமல், துடிப்பான சிவில் சமூகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. இவை குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பகிரங்க விவாதங்களில் ஈடுபட அனுமதிக்கின்றன. இவை சமூகங்கள் சவால்களை அமைதியான முறையில் எதிர்கொள்ள உதவும் அத்தியாவசியப் பாதுகாப்புகளாகும்.
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான புதிய சட்டங்களை இலங்கை பரிசீலித்து வரும் நிலையில், அத்தகைய சட்டக்கட்டமைப்புகள் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வது முக்கியம். நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தற்செயலாக ஜனநாயக வெளியைக் கட்டுப்படுத்தவோ அல்லது நியாயமான சிவில் செயற்பாடுகள் மற்றும் விமர்சனங்களை முடக்கவோ கூடாது.
சுவிட்சர்லாந்தின் அனுபவத்தின் பிரகாரம், ஜனநாயகத்திற்குத் தொடர்ச்சியான முதலீடுகள் தேவையாகவுள்ளன. எமது நாட்டில், உள்ளுர் சுயாட்சி மற்றும் நேரடிப் பங்கேற்பு, அதிகாரப்பகிர்வு ஆகியவை பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவை மற்றவர்களுக்கு வழங்கும் கட்டளைகள் அல்ல, மாறாக ஜனநாயக அமைப்புகள் எவ்வாறு பரிணமிக்கலாம் மற்றும் நிலைத்து நிற்கலாம் என்பதற்கான உதாரணங்கள் மட்டுமேயாகும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றேன்.
அனுபவப்பகிர்வு என்ற அடிப்படையிலேயே சுவிட்சர்லாந்து இலங்கையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும், உள்ளுர் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கும், அறிவார்ந்த அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் ஆதரவளிக்கிறது.
ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாதையைக் கண்டறிந்தாலும், உரையாடல், குடிமக்களுடனான நெருக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவை உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் பொருந்தும் மதிப்புகளாகும் என்றார்.





