அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் அடிப்படையற்றது: அமைச்சரவை பேச்சாளர்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மிகக் குறுகிய ஒரு குழுவினரால் வெ வ்வேறு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வைத்தியர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கின்றனர். ஆனால் அரச அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒரு சிறிய வைத்தியர்கள் குழு தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-01-2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இந்த வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் நிர்வகிக்கப்படுகிறது. பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து தற்போது இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் இம்மாதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பிற்காக இவ்வாண்டு மாத்திரம் 220 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தித்வா புயலால் நாட்டுக்கு சுமார் 4 பில்லியன் டொலருக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான இந்த சம்பள அதிகரிப்பை நிறுத்தவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களிலிருந்து சர்வதேச நாடுகள் வரை இந்த இழப்பிலிருந்து மீளெழுவதற்கான இலங்கை மீளக் கட்டியெழுப்பும் நிதியத்துக்கு தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஆனால் இவ்வாறானதொரு நிலையில் நோயாளர்களின் உயிரைப் பணயம் வைத்து தமக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்துவது அடிப்படையற்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மிகக் குறுகிய ஒரு குழுவினரால் வெ வ்வேறு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வைத்தியர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். விசேட வைத்திய நிபுணர்களில் பெரும்பான்மையானோர் இதில் பங்கேற்கவில்லை. இந்த குழு மக்களை மாத்திரமின்றி, தமது தொழிற்துறையை சார்ந்த ஏனைய வைத்தியர்களையும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களது பிடிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஏனைய வைத்தியர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.





