சட்டமா அதிபர் விவகாரத்தில் தேவையேற்படின் குற்றப்பிரேரணை: அரசாங்கம் அதிரடி
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு 159 ஆசனங்கள் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக, நியாயமான காரணியொன்றை முன்வைக்காமல் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக நியாயமான காரணியொன்றை முன்வைக்காமல் சட்டமா அதிபரை பதவி நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை. ஆனால் குறிப்பிட்ட வழக்கொன்று தொடர்பில் ஏற்படும் தாமதங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டால் அது குறித்து அரசாங்கமும் அரச நிறுவனங்களும் நிச்சயம் அவதானம் செலுத்தும். அந்த வகையில் தேவையேற்படின் குற்றப்பிரேரணை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 27-01-2026அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமக்கு மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பிரதான பொறுப்பு ஊழல், மோசடியாளர்கள் மற்றும் கொலைக்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகும். அந்த நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் சட்டத்தை அவ்வாறு துரிதமாக நடைமுறைப்படுத்த முடியாது.
அந்த வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவரேனும் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டால், அது குற்றஞ்சுமத்துபவர்களின் உரிமையாகும். அதனை எம்மால் நிராகரிக்க முடியாது. எனவே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புக்கள் அதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்களும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களும் வெ வ்வேறானவையல்ல. உண்மையில் மக்களை விட, அரசாங்கத்துக்கு பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன. இந்நிலையிலேயே சட்டமா அதிபரை பதவி நீக்க வேண்டும் என சமூகத்தில் ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளது. ஆனால் சட்டமா அதிபரை ஜனாதிபதியால் பதவி நீக்க முடியாது.
சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கென நாட்டில் வழிமுறையொன்று காணப்படுகிறது. 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க பதவி விலக்கல் சட்டத்துக்கமையவே சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபரை பதவி நீக்க முடியும். அத்தோடு இது பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை முன்ரவைத்து அதனை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமா அதிபரை பதவி நீக்க முடியும்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு 159 ஆசனங்கள் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக, நியாயமான காரணியொன்றை முன்வைக்காமல் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம். ஆனால் குறிப்பிட்டவொரு வழக்கு விவகாரம் தொடர்பில் சமூகத்தில் உருவாகியுள்ள நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கமும் அரச நிறுவனங்களும் அவதானம் செலுத்த வேண்டும். அவதானம் செலுத்தப்படும்.
எனவே இந்த வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.





