மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதிஅநுர
மத்திய மலைநாட்டை முழுமையாக கண்காணிக்கும் வகையில் இந்த அதிகாரசபை இந்த ஆண்டுக்குள் ஸ்தாபிக்கப்படும்.
மத்திய மலைநாட்டின் தற்போதைய பௌதிக நிலைமை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் பேரழிவு தோற்றம் பெறும்.அரசாங்கம் என்ற அடிப்படையில் இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதற்காக மலையகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய அதிகாரசபை ஒன்று ஸ்தாபிக்கப்படும்.மலையகத்தில் அனைத்து திட்டமிடலுக்கும் இந்த அதிகார சபையிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பளை, தொரகல பீகொக் ஹில் குடியிறுப்பின் ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் 27-01-2026 அன்று நடைபெற்ற ' டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கஸ்டமான நிலையில் உள்ள கிராமிய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான ஆலோசனைகளை புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சுக்கு வழங்கியுள்ளேன்.
மத்திய மலைநாடு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். மலைநாடு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் மீளாய்வு அறிக்கையை முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையில் மலைநாட்டின் ஆரம்ப நிலை, தற்போதைய நிலைமை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை நீடித்தால் எதிர்காலத்தின் நிலைமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மலைநாட்டில் மண் அடித்துச் செல்லப்பட்டு பாறைகள் மாத்திரம் மிகுதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மலைநாட்டில் உள்ள அநேகமான நீர்நிலைகள் சேற்றினால் நிரம்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 13.6 சதவீத பரப்பினை மத்திய மலைநாடு கொண்டுள்ளது. இந்த மலைநாட்டில் தான் 76 சதவீதமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகிறது.நீரும் மண்ணால் சேமிக்கப்படுகிறது. ஆகவே மலைநாடு மிகவும் முக்கியமானது.
மத்திய மலைநாட்டின் தற்போதைய பௌதிக நிலைமை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் பேரழிவு தோற்றம் பெறும்.அரசாங்கம் என்ற அடிப்படையில் இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதற்காக மலையகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய அதிகாரசபை ஒன்று ஸ்தாபிக்கப்படும்.அதற்குரிய சட்ட வரைவுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த அதிகார சபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்படும்.
மத்திய மலைநாட்டை முழுமையாக கண்காணிக்கும் வகையில் இந்த அதிகாரசபை இந்த ஆண்டுக்குள் ஸ்தாபிக்கப்படும். அனைத்து திட்டமிடல்களுக்கும் அதிகார சபையிடம் அனுமதி வழங்கப்படும். முறையற்ற வகையில் செயற்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் வழங்கப்படும்.இது மலையகத்தை பாதுகாப்பதற்கான சிறந்த தீர்மானமாகும். இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.





