ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவும் நேற்று போராட்ட இடத்திற்குச் சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் 28-01-2026 அன்று நான்காவது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தமக்கு, ஆசிரியர் சேவையில் முறையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், பல போராட்டக்காரர்களின் உடல் நிலை நலிவடைந்து வரும் நிலையிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது ஆசிரியர் பணிக்கான தகுதிகள் இருந்தும், தங்களை 'அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்' என்ற வரையறைக்குள் வைத்திருப்பது அநீதியானது எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் "தேர்வு மூலமே நியமனம் வழங்கப்படும்" என பிடிவாதமாக இருப்பதால், இந்தப் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும், தமது நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை களத்தை விட்டு நகரப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நேற்று போராட்ட களத்திற்கு விஜயம் செய்த மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சமால் சஞ்ஜீவ, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவ உதவிகளையும் வழங்கியிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவை. ஆனால், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இடம்பெறும் இந்தப் போராட்டம் குறித்து அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இவர்களது அடிப்படை உரிமைகளுக்காகவும், மருத்துவப் பாதுகாப்பிற்காகவும் நாம் துணை நிற்போம் என்றார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவும் நேற்று போராட்ட இடத்திற்குச் சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்த ஆசிரியர்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பது நியாயமற்றது. போராட்டக்காரர்களுக்குப் பொலிஸார் ஊடாகத் தடையுத்தரவுகளைப் பெறாமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். அமைதியாகப் போராடும் உரிமை அரசியலமைப்பின் 14(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸாரும் அரசாங்கமும் உணர வேண்டும் என்றார்.





