தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு 2.1 மில்லியன் டொலர் அபராதம்
மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக 28-01-2026 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் நிலக்கரி மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. எவ்வாறாயினும், இரண்டாவது நிலக்கரி கப்பலின் மாதிரி அறிக்கைகளில் எவ்வித சிக்கல்களும் இல்லை.
அத்துடன், மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நிலக்கரி எரிப்பு மூலம் உருவாகும் சாம்பலினால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டறிந்ததாகவும், இதன்போது அவர்கள் இது தொடர்பாக தனக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர் எனவே, பறக்கும் சாம்பலினால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.





