உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் கலாநிதி ஹரிணி
நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அபிவிருத்திக்கான வழிகளை விரிவுபடுத்தி கைத்தொழில் அபிவிருத்திக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.கைத்தொழில் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குதலை நியாயமான பொருளாதார உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம்.
 
        
உள்நாட்டு கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம். உள்நாட்டு தொழில்முனைவோரை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.
கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில்   நடைபெற்ற '2025  கைத்தொழில் மற்றும் சேவை மதிப்பீட்டு விருது விழாவில் உரையாற்றுகையில் பிரதமர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனத்தினால்  கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விருது விழாவின் நோக்கம்இ இலங்கையின் கைத்தொழில் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை இனங்கண்டு அவற்றை ஊக்குவிப்பதாகும்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், 'நாட்டின் கைத்தொழில் துறையை பலப்படுத்துவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், இறக்குமதிகளைக் குறைத்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நேரடியான பங்களிப்பைச் செய்கின்றது.
கைத்தொழில் துறையின் கொள்ளளவு அபிவிருத்தி ,புத்தாக்கங்களை ஊக்குவித்தல், விரிவாக்கத்தை இலகுபடுத்துதல் மற்றும் புதிய சந்தைகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பலமான போட்டித்தன்மை மிக்க கைத்தொழில் தளம் என்பது பொருளாதார ரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முன்னுரிமை மட்டுமல்லஇ அது ஒரு தேசியத் தேவையாகும்.
நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் அபிவிருத்திக்கான வழிகளை விரிவுபடுத்தி கைத்தொழில் அபிவிருத்திக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.கைத்தொழில் துறையில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குதலை நியாயமான பொருளாதார உத்தியாகவும் பயன்படுத்தப்படலாம்.
உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களின் வெற்றி மூலம் எமது தேசியப் பொருளாதாரத்தின் அத்திவாரம் வலுப்பெறுகிறது. உற்பத்தி,முகாமைத்துவம், புத்தாக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய போதிலும்,அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும் சரியாக இனங்காணப்படுவதில்லை.
ஊழியர்கள், முகாமையாளர்கள் அல்லது தொழில்முயற்சியாளர்கள் என பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம், உற்பத்தித்திறன் மற்றும் புத்தாக்கம் மூலம் ஒட்டுமொத்த கைத்தொழில் சூழலியல் அமைப்பையும் பலப்படுத்த உதவுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்கள் மூலம் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். துரிதக் கடன் வசதி மற்றும் நிதிச் சேவைகள், தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி, சமமான சேவைக்குச் சமமான ஊதியம் வழங்குதல், பெண்களை மையமாகக் கொண்ட தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் தலையிடும்.
தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் ஊதியம் வழங்கப்படாத பராமரிப்பு  போன்ற தடைகளை நீக்குவதற்கும், பரந்த மேம்பாட்டிற்காக பால்நிலைக்குப் பதிலளிக்கும் கைத்தொழில் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. தேசிய அபிவிருத்தியில் தொழில்முயற்சியாளர்களின் பங்கை நாம் பாராட்ட வேண்டும். அவர்களின் படைப்பாற்றலும்  உறுதிப்பாடும் பொருளாதார முன்னேற்றத்தின் அத்தியாவசிய காரணிகளாகும்  என்றார்.





 
  
