கொழும்பு 7இல் நான்கு புதிய மேல் நீதிமன்றங்கள்: அரசாங்கம் அறிவிப்பு
அரசின் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைப்பயன்பாடுடைய அல்லது பகுதியளவில் பூர்த்திசெய்துள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களைப் பயனுள்ள நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
        
கொழும்பில் நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை உடனடியாக நிறுவுவதற்கான இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதிமன்றங்களில் இழுபறி நிலையிலுள்ள வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொழும்பு 7இல் அடையாளப்படுத்தப்பட்டள்ள 4 கட்டடங்களில் இவ்வாறு நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளன.
ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 4 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள கட்டிடங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் அமைச்சரவையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய இலக்கம் B 88, கிறகெரி வீதி, கொழும்பு 7, இலக்கம் C 76, பௌத்தாலோக்க மாவத்த, கொழும்பு 7, இலக்கம் B 108, விஜேராம வீதி, கொழும்பு 7, இலக்கம் B 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 7 முகவரிகளிலுள்ள கட்டடங்களில் இவ்வாறு நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளன.
இதேவேளை அரசின் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைப்பயன்பாடுடைய அல்லது பகுதியளவில் பூர்த்திசெய்துள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களைப் பயனுள்ள நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்வேறு நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள, தற்போது கைவிடப்பட்டுள்ள அல்லது பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டு சரியான வகையில் பயன்படுத்தாமல் காணப்படுகின்ற கட்டுமானங்கள் தொடர்பாக திறைசேரியால் பொது நிர்வாக அமைச்சின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலக மட்டத்தில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த தகவல்களுக்கமைய அடையாளங் காணப்பட்டுள்ள குறை பயன்பாடுடைய அல்லது பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 2972 கட்டிடங்கள் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த கட்டிடங்களைப் பயனுள்ள விடயங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் துரிதமாக முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.





 
  
