சிறந்த ஒத்துழைப்பு துரித சுகாதார சேவைகளை வழங்க உதவியது: ஜப்பானிய அனர்த்த முகாமைத்துவ நிபுணர்கள் குழு
தமது தாய்நாட்டிற்குப் புறப்பட்ட ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவினர் கடந்த 3ஆம் திகதி நாட்டுக்கு வந்திருந்தனர்.
சுகாதார அமைச்சு வழங்கிய சிறந்த தலைமைத்துவமும், ஒத்துழைப்புமே இலங்கையில் அனர்த்தங்களுக்கு ஆளான மக்களுக்குத் துரித சுகாதார சேவைகளை வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிபெறப் பெரிதும் உதவியதாக, இலங்கைக்கு வந்திருந்த ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ விசேட நிபுணர்கள் குழுவின் தலைவர் ஐவாசே கியிச்சிரோ தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் 15-12-2025 அன்று காலை சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவை சந்தித்து கலந்துறையாடியிருந்தனர்.
தமது தாய்நாட்டிற்குப் புறப்பட்ட ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவினர் கடந்த 3ஆம் திகதி நாட்டுக்கு வந்திருந்தனர். சுமார் இரண்டு வாரங்களாக நாட்டில் தங்கியிருந்து இந்தக் குழுவினர் சிலாபம் பிரதான பொலிஸ் நிலையத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விசேட கள வைத்தியசாலையில் சிலாபம் மற்றும் அதை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குச் சிகிச்சை சேவைகளை வழங்கியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின்போது இலங்கைக்குத் தேவையான நிவாரண சேவைகளை வழங்குவதற்காக வந்த முதலாவது அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர்கள் குழு ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவம குழுவாகும் அந்தவகையில், அவர்கள் பொதுமக்களுக்காக சிறந்த மருத்துவ சேவையை வழங்கியது.
சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக நாட்டில் தங்கியிருந்து இலங்கை மக்களுக்குச் சிகிச்சை சேவைகளை வழங்கியதற்காக சுகாதார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் சார்பில் ஜப்பானிய அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
ஜப்பான் அவசரகால அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் தலைவர் ஐவாசே கியிச்சிரோவும் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சு வழங்கிய சிறந்த தலைமைத்துவமும், ஒத்துழைப்புமே இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரித சுகாதார சேவைகளை வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிபெறப் பெரிதும் உதவியது. அதற்காகத் தமது குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.
மேற்படி ஜப்பான் அனர்த்த முகாமைத்துவ விசேட நிபுணர்கள் குழுவில் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், விநியோகஸ்தர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உட்பட 31 சுகாதாரத்துறைசார் நிபுணர்களும் சிகிச்சை சேவையை வழங்கியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





