தேசிய பாடசாலை உணவுத்திட்டத்துக்கு மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் டொலர் உதவி
இந்நி தியுதவியானது தம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'பாடசாலை வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை வரை' எனும் திட்டத்துக்குப் பெரிதும் பங்களிப்புச்செய்யும் என உலக உணவுத்திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
        
இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக உலகளாவிய பேஷன் வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்பான உலக உணவுத்திட்டம் மூலம் 2.7 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
மைக்கேல் கோர்ஸ் நிறுவனத்தினால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் 'பசிப்பணி நீங்குவதைக் காண்போம்' எனும் பிரசாரத்தின் ஊடாக வழங்கப்படும் இந்நி தியுதவியானது தம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'பாடசாலை வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை வரை' எனும் திட்டத்துக்குப் பெரிதும் பங்களிப்புச்செய்யும் என உலக உணவுத்திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிதியுதவியின் மூலம் தற்போது 8 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பாடசாலை வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை வரை' என்ற திட்டத்தை 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தமுடியும் என்றும், அதனூடாக அடுத்த 3 ஆண்டுகளில் 250,000 குழந்தைகள் நாளாந்தம் போசாக்கான உணவு பெறுவதை உறுதிசெய்யமுடியும் என்றும் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 'இலங்கையின் பாடசாலை உணவுத்திட்டத்தை முன்னெடுப்பதில் மைக்கேல் கோர்ஸ் நிறுவனத்தில் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டாண்மையை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம். பல குடும்பங்களுக்கு இந்த உணவு ஒரு உயர்நாடியாகும்' என உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பிலிப் வோர்ட் குறிப்பிட்டுள்ளார்.





 
  
