Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஒடிசாவில் தமிழ் அதிகாரியின் வீட்டில் தாக்குதல் பா.ஜ.க.வே ஈடுபட்ட காட்டுமிராண்டித்தனம் கி.வீரமணி கண்டன அறிக்கை

ஒடிசாவில் தமிழ் அதிகாரியின் வீட்டில் தாக்குதல் பா.ஜ.க.வே ஈடுபட்ட காட்டுமிராண்டித்தனம் கி.வீரமணி கண்டன அறிக்கை

ஒடிசா மாநில முதல் அமைச்சரிடம் தனிச் செய லாளராக இருக்கக் கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி யின் வீட்டில் புகுந்து அநாகரிக மான முறையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய பா.ஜ.க.வைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

👤 Saravana Rajendran20 Feb 2018 1:23 AM GMT
ஒடிசாவில் தமிழ் அதிகாரியின் வீட்டில் தாக்குதல் பா.ஜ.க.வே ஈடுபட்ட காட்டுமிராண்டித்தனம்   கி.வீரமணி கண்டன அறிக்கை
Share Post

பாரதீய ஜனதா, சங் பரிவார்களின் மிகவும் கேவலமான, தரம் தாழ்ந்த வன்முறை நடவடிக்கைகள் நாளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
எடுத்துக்காட்டாக ஒடிசாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வாகும்.
ஒடிசாவில் கடந்த 19 ஆண்டுகாலமாக தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நவீன் பட்நாயக் தலைமையில் மக்கள் நம்பிக்கைக்குரிய மக்கள் நல அரசாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரே வெறித்தனத்தோடு மிகவும் கேவலமான அணுகுமுறைகளை செயல்படுத்தி வருகிறது பி.ஜே.பி.
மதக் கலவரங்களை, ஜாதிச் சண்டைகளை, சூழ்ச்சி வலைகளைப் பின்னி உருவாக்கி, ஒரு பகுதி மக்களைத் தம் வயப்படுத்திக் கொள்வது என்பது அவர்களின் திட்டங்களில் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியதாகும்.
கோமாதா குலமாதா என்று இந்துத்துவா காயைக் கையில் எடுத்துக்கொண்டு, பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான, சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டுவது, அடித்துக் கொல்லுவது போன்ற கொடூரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒடிசாவில் தமிழ் அதிகாரி வீட்டில்
அரங்கேறிய கேவலம்
ஒடிசாவிலோ நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அவ்வாறு மக்கள் நல அரசாக அது செயல்படுவதற்குக் காரணம் அம்மாநில முதலமைச்சரின் தனிச் செய லாளர் கார்த்திகேயன் பாண்டியன் அய்.ஏ.எஸ். ஆவார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; முதல்வரின் தனிச்செயலாளராக இவர் சிறப்பாக செயல்படுவதால்தான் ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படுகிறது; இதனால் தங்களால் அரசியல் நடத்த முடியவில்லை; மக்களிடத்தில் பா.ஜ.க.வை நிலை நிறுத்த முடியவில்லை என்ற ஆத்திரத்தில் பொறாமைத் தீயில் பொசுங்கி, அந்த அதிகாரியைத் தாக்குவது, சிறுமைப்படுத்துவது என்ற கீழ்த்தர வேலையில் ஈடுபட்டு வருகிறது இந்தப் பாசிசக் கூட்டம். அந்தத் தமிழ் அதிகாரியின் வீட்டு மதிற்சுவர் மேல் ஏறிக் குதித்து அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்ததோடு, சாணியைக் கரைத்து வீட்டுச் சுவரில் எல்லாம் ஊற்றி இருக்கிறார்கள்.
பா.ஜ.க.வே பங்கேற்பு!
பா.ஜ.க.வை எல்லா வகைகளிலும் தாங்கிப் பிடிக்கும் 'தினமணி' ஏடே, கண்டித்துத் தலையங்கம் எழுதியுள்ளது (16.2.2018) என்றால், அந்தக் கயவர்களில் காலித்தனத்தை என்னவென்று சொல்லுவது!
கொஞ்சம்கூட ஒளிவு மறைவு இல்லாமல் ஊட கங்களுக்குத் தகவலும் தெரிவித்து விட்டு, பா.ஜ.க. கொடியுடன் சென்று அந்த அதிகாரியின் வீட்டில் இவ்வளவுக் கேவலமான வெறியாட்டத்தை அரங்கேற் றினர் என்று தினமணியின் தலையங்கம் குறிப்பிடுகிறது.
இதன் பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா? மத்திய பிஜேபி அரசில் பெட்ரோலியத் துறை அமைச்சராக உள்ளவரும், அடுத்தாண்டு ஒடிசா மாநிலத்தில் நடக்கவுள்ள சட்ட பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் முதல் அமைச்சர் வேட்பாளருமான தர்மேந்திர பிரதான் என்பவர்தான் இதன் பின்னணி கர்த்தா என்று அதே தினமணி தலையங்கம் தெரிவிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?
ஏதோ ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தான் இது போன்ற வன்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மையல்ல. பிஜேபியே (கொடியுடன் சென்றுள்ளனரே) அதன் மத்திய அமைச்சரே நேரடியாக ஈடுபடுவதிலிருந்து ஒட்டு மொத்தமாக பிஜேபியே இத்தகு இழி செயல்களில் ஈடுபடுகிறது என்பது பட்டவர்த்தனமாகி விட்டது.
இதற்கு முன்பும் கூட ஒடிசாவில் சங்பரிவார்கள் தங்கள் கைவரிசையைக் காட்டித் தான் வந்துள்ளனர்.
1999இல் என்ன நடந்தது?
1999 ஜனவரி 23ஆம் நாள் ஒடிசாவில் நடைபெற்ற ஒரு காட்டுமிராண்டி சம்பவம் உலகையே வெட்கித் தலை குனியச் செய்தது. ஒடிசா மாநிலம் மனோகர்பூரில் தொழு நோயாளிகளுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் (வயது 58) அவ ரது அருமைச் செல்வர்கள் பிலிப்ஸ் (வயது 8) திமோதி (வயது 6) ஆகியோரை பஜ்ரங்தள் என்ற சங்பரிவார் குடும்பத்தைச் சேர்ந்த தாராசிங் தலை மையில் தான் குருதியை உறையச் செய்யும் வகையில் ஜீப்போடு தீயிட்டுக் கொளுத்தினர். (இவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது).
அதே ஒடிசாவில்தான் புதுக்கோட்டைச் சேர்ந்த அருள்தாஸ் என்ற பாதிரியார் அதே கும்பலால் அம்பு எய்திக் கொல்லப்பட்டார் (2.5.1999) அதே ஒடிசா வில் இஸ்லாமிய வியாபாரியான ஷேக் ரகுமான் என்பவரும் எரித்துக் கொல்லப்பட்டார்.
லட்சுமானந்தா படுகொலை என்ற பெயரில்...
2008ஆம் ஆண்டு லட்சுமானந்தா சரஸ்வதி என்பவர் கொல்லப்பட்டதைக் கண்டிப்பது என்ற பெயரால் மிகப் பெரிய வன்முறை வெறியாட் டத்தை கிறித்தவர்களுக்கு எதிராக ஆடித் தீர்த் தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் கொல்லப் பட்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு மலைக் காடுகளுக்கு ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அந்த வன்முறை தொடர்பாக ஜஸ்டிஸ் ஏ.எஸ். நாயுடு தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் லட்சுமானந்தா சரஸ்வதி கொலைக்கும், கிறித்துவ அமைப்புகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
செய்யாத குற்றத்திற்காக ஜென்மத் தண்டனை என்பது போல ஒன்றை அழிக்க வேண்டுமானால் அபாண்டமாகப் பழி போடுவது என்ற பார்ப்பனியத் திற்கே உரித்தான, கீழத்தர கேவல யுக்தியோடுதான் அவ்வளவுப் பெரிய திட்டமிட்ட வன்முறைகள் கொடூரமான நடைபெற்றன.
நாடு சுடுகாடாகும் எச்சரிக்கை!
ஹிட்லரும், முசோலினியும் வெட்கப்படும் அளவுக்குப் பாசிசத்தை நாசிசத்தை கையில் எடுத்துக் கொண்டு நாளும் நர வேட்டையாடும், நாளும் வன்முறைத் தீப்பந்தத்தை கையில் எடுத்துக் கொண்டு திரியும் பா.ஜ.க. தலைமையிலான சங்பரிவார் வானரக் கூட்டத்தை அறவே இல்லாமல் ஒழித்துக் கட்டுவது ஒன்றே 125 கோடி இந்திய மக்களின் முதன்மையான கடமையாக இருக்க முடியும் - இருக்கவும் வேண்டும். இல்லையெனில் நாடு சுடுகாடாகி விடும் எச்சரிக்கை.