இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேவ் டக்வெர்த்
மேலும் விளக்கமளித்த உயர்ஸ்தானிகர் நாங்கள் எங்கள் கருத்துக்களையும், குறிப்பாக எங்களது விழுமியங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கிறோம்.
இலங்கையின் நல்லிணக்கப் பயணத்துக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வழங்கும். இது குறித்து அரசாங்கம் அளித்துள்ள சில அறிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு பயனுள்ள வகையில் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இது இலங்கையர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயல்பாடாக அமைய வேண்டும். வெளிநாடு இதனை ஆரம்பித்து வைக்க முடியாது. ஆனால் கோரிக்கை விடுத்தால் எம்மால் ஆதரவு வழங்க முடியும் என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேவ் டக்வெர்த் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானங்களை நாங்கள் நீண்டகாலமாக ஆதரித்து வருகிறோம். ஏனெனில், இந்தச் செயற்பாட்டை முன்னோக்கி நகர்த்த இது ஒரு முக்கியமான வழி என்று நாங்கள் கருதுகிறோம். மேலும், இங்குள்ள சமூகத்தின் சில பிரிவினர், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது தொடர்பாக என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்றும் உயர்ஸ்தானிகர் கூறினார்.
பாத்பைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடனான வட்டமேசை மாநாடு நேற்று கொழும்பில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானங்களுக்கு அவுஸ்திரேலியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேவ் டக்வெர்த் இலங்கையின் நல்லிணக்க பயணத்துக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வழங்கும் என்று குறிப்பிட்டார்.
‘’சமூகத்தின் பல தரப்பினரும் இது குறித்து கவலை கொண்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ஆஸ்திரேலியாவில் வாழும் பெரிய அளவிலான இலங்கை வம்சாவளி சமூகமும் இந்த செயல்பாடுகள் முன்னோக்கி நகர்வதை பார்க்க விரும்புகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட இந்த விவகாரங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்துள்ள சில அறிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன. இலங்கை அரசாங்கத்திற்கு பயனுள்ள வகையில் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்
ஆனால் இந்த பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் இலங்கையர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயல்பாடாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘’நிச்சயமாக இது இலங்கையர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயல்பாடாக (Sri Lankan-driven process) இருக்க வேண்டும், அவுஸ்திரேலியா போன்ற ஒரு வெளிநாடு இதனை கட்டாயப்படுத்தவோ அல்லது தீர்த்து வைக்கவோ முடியாது. ஆனால் எங்களால் செய்யக்கூடியது என்னவென்றால், நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எங்களால் முடிந்த ஆதரவை வழங்குவதுதான்’’ என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தேவ் டக்வெர்த் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் விளக்கமளித்த உயர்ஸ்தானிகர் நாங்கள் எங்கள் கருத்துக்களையும், குறிப்பாக எங்களது விழுமியங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கிறோம். சில சமயங்களில், அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பும் விடயங்கள் குறித்து கடினமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால், இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இலங்கையின் நல்லிணக்கப் பயணத்தில் ஆஸ்திரேலியா ஒரு பங்காளியாக இருக்க விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானங்களை நாங்கள் நீண்டகாலமாக ஆதரித்து வருகிறோம். ஏனெனில், இந்தச் செயல்பாட்டை முன்னோக்கி நகர்த்த இது ஒரு முக்கியமான வழி என்று நாங்கள் கருதுகிறோம். மேலும், இங்குள்ள சமூகத்தின் சில பிரிவினர், பொறுப்புக்கூறலை மேம்படுத்துவது தொடர்பாக தாங்கள் விரும்பும் சில விடயங்கள் குறித்து என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அந்த விவகாரங்களை எழுப்பவும், நடைமுறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை ஊக்குவிக்கவும் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது அரசாங்கம் 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' பற்றி பேசி வருகிறது. இந்த முயற்சியில் அவுஸ்திரேலியா உதவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளனவா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் இத்தகைய ஒரு செயல்பாடு இலங்கையர்களால் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். இது இலங்கையரால் வழிநடத்தப்படும் ஒரு முயற்சியாக இருக்க வேண்டும். இப்போது, இலங்கை முன்னெடுத்துச் செல்லும் ஒரு செயற்பாட்டிற்கு ஆதரவாக எங்களால் பயனுள்ள பங்களிப்பை வழங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டாலோ, நிச்சயமாக நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.
அவுஸ்திரேலியாவோ அல்லது வேறு எந்த நாடோ இதனைத் தொடங்கி வைக்கவோ அல்லது இயக்கவோ முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது சமூகத்திற்குள்ளிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் வர வேண்டிய ஒன்றாகும். ஆனால் எங்களால் இயன்ற எந்த வகையிலும் நாங்கள் அதற்கு ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டார்.





