சமஷ்டி அரசியலமைப்பு குறித்து ஆராயும் கூட்டம் யாழில் இன்று
15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது.
தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசினால் கொண்டுவரப்படவிருக்கும் 'ஏக்கிய இராச்சிய' வரைவை நிராகரித்து, கூட்டாட்சி தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் தமிழ்ந்தேசியக்கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறவித்திருக்கும் அதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் இதில் கலந்துகொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது.
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை நிராகரித்து, அதற்குப் பதிலாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது.
அக்கடிதத்துக்கு பதில் அனுப்பிவைத்த சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாரின் அழைப்புக்கடிதத்தின் இரண்டாம் பந்தியின் கருத்துக்களின் அடிப்படையில் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சாத்தியமற்றது எனவும், இருப்பினும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாக எதிர்ப்பதிலும், எமது கட்சியின் அடிப்படைக் கோட்பாடான சமஷ்டி கூட்டாட்சி முறைமையை வலியுறுத்துவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி கஜேந்திரகுமாரினால் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்துக்கும் அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பதில் அனுப்பிய நாகலிங்கம், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்து கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதில் அனுப்பிய கஜேந்திரகுமார், அச்சந்திப்பை 15 ஆம் திகதிக்கு முன்பதாக ஒருங்கிணைக்குமாறு ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருப்பினும் 15 திகதி நடைபெறவிருக்கும் சந்திப்பை தமிழ்த்தேசிய பேரவை ஒருங்கிணைப்பதன் காரணமாக, இச்சந்திப்பையும் அவர்களே ஏற்பாடு செய்வது தான் இலகுவானதாக இருக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மீண்டும் பதில் அனுப்பியது.
இவ்வாறானதொரு பின்னணியில், இன்றைய தினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் வினவியபோது, தாம் இறுதியாக அனுப்பிய கடிதத்துக்கு இன்னமும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.





