தலங்கம சட்டத்தரணி மனைவி படுகொலை: 4 சந்தேக நபர்கள் அடையாளம் எரியூட்டப்பட்ட நிலையில் கார் மீட்பு
14-02-2026 அன்று காலி, பத்தேகம - அகலிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் பயணித்த காரக இருக்கலாமென சந்தேகிக்கப்படும் கார் எரியூட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
தலங்கம, அக்குரேகொட பகுதியில் 13-02-2026 அன்று இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதுடன், , அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தலங்கம் அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள பல்பொருள் விற்பனை நிலைய வாகன தரிப்பிடத்தில் வைத்து, 13-02-2026அன்று மாலை 4.37 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. பல்பொருள் விற்பனை நிலையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு, தமது காரில் திரும்ப முற்பட்ட தம்பதியினரை இலக்கு வைத்து, மற்றுமொரு காரில் வந்த இருவர் கைத்துப்பாக்கி மற்றும் ரி -56 ரக துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் 44 வயதுடைய சட்டத்தரணி புத்திக்க மல்லவஆரச்சி மற்றும் அவரது மனைவியான 42 வயதுடைய நிசான்சலா ஆகியோரே உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் தற்போது பொரள்ளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஈ.பி.கே.ஐ -7738 எனும் இலக்கத்தைக் கொண்ட கார் பற்றி தகவல் அறிந்திருப்பின் அவற்றை தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் 14-02-2026 அன்று காலி, பத்தேகம - அகலிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் பயணித்த காரக இருக்கலாமென சந்தேகிக்கப்படும் கார் எரியூட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பத்தேகமவிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில், பற்றைக்குள் இக்கார் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் தடயங்களை அழிக்கும் நோக்கில் காருக்குத் தீ வைத்துள்ளமை விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குற்றச்செயலை இடுத்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற போது கொட்டாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் காரின் இலக்கத் தகடு கீழே விழுந்துள்ளதுடன், அது போலியானது எனவும், அவ்வாகனத்துக்குறியது அல்ல எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த சட்டத்தரணி, தேடப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கரந்தெனிய சுத்தா' என்பவரின் வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகி வந்தவர் என்பதுடன், 'கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருகடகலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்படுகொலை தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்ளர் குறிப்பிட்டுள்ளபடி, 12 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
பொதுமக்கள் வழங்கிய சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையில் மிக விரைவில் சந்தேகநபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த நேற்று இடம்பெற்ற செய்தியாளார் சந்திப்பில் போது தெரிவித்தார்.





