எம்.பி.க்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் மதிப்பாய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர்
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பிற்காக பிஸ்டர் ரக துப்பாக்கியைக் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் பாதுகாப்பினை கோருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் பொலிஸாரால் பாதுகாப்பு மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 04-11-2025 இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு பிரஜைக்கும் தனது பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை காணப்படுமாயின், பொலிஸாருக்கு அது குறித்து அறிவிக்க முடியும். அதற்கமைய பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வுக்கமைய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு கோரியுள்ளதாக செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பிற்காக பிஸ்டர் ரக துப்பாக்கியைக் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது. அது குறித்து பொலிஸாரால் மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மதிப்பாய்வின் நிறைவில் பொலிஸாரால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அவர்களுக்கிடையில் துப்பாக்கிச்சூட்டு சண்டைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் பாதுகாப்பினை கோருகின்ற நிலையில், பொலிஸார் அது குறித்து அவதானம் செலுத்துவர். ஆனால் எமக்கு துப்பாக்கிகள் தேவையில்லை. ஆளுங்கட்சியில் எவரும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸில் முறைப்பாடளிக்கவுமில்லை என்றார்.





