மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துங்கள்: சஜித் பிரேமதாச விசேட கோரிக்கை
அரசாங்கம் கேட்க விரும்பாத விடயங்களை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் கூறும் போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது அரசாங்கத்தின் பணியல்ல.
நாட்டில் தற்போது தினந்தோரும் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றாக மாறியுள்ளது. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை 06-09-2025 அன்று வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
நாட்டில் தற்போது தினந்தோரும் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றாக மாறியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்த அடிப்படையிலேயே அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பு நடத்துவாத எம்மை கேலி செய்வர்களது ஆட்சியிலேயே இவ்வாறு இடம்பெறுகிறது. இந்த சம்பவங்கள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை கேள்விக்குள்ளாக்குகின்றன. சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாகும். எனவே இவற்றை உடனடியாக தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறித்த இனந்தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல விடயங்களைப் பாராட்டுவதற்கும் தவறான விடயங்களை விமர்சிப்பதற்கும் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் உரிமையுள்ளது.
அரசாங்கத்தின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல. அவற்றை சுட்டிக் காட்டுவதற்கு 220 இலட்சம் மக்களுக்கும் சிறந்த புரிதல் காணப்படுகிறது. அது மக்களின் உரிமையாகும். அந்த உரிமையை அரசாங்கத்துக்கோ குண்டர் கும்பலுக்கோ சவாலுக்கு உட்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.
சமூகத்தில் அதிகரித்து வரும் இந்த வன்முறை, கொலை கலாசாரம் உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும். அதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கு அரசாங்கத்துக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசாங்கம் கேட்க விரும்பாத விடயங்களை சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் கூறும் போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது அரசாங்கத்தின் பணியல்ல.
மாறாக அவர்கள் கூறுவதைக் கேட்டு தமது தவறுகளை திருத்திக் கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் முன்னிற்பதோடு மாத்திரமின்றி, அரசாங்கத்தின் பொறுப்பையும் நாம் ஏற்றுக் கொள்வோம்.





