இந்தியா - சீனா உறவுகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர்
பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகப் பேசினேன்.
சிக்கலான இந்தியா - சீனா உறவுகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடானது விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதாகவும், அதேவேளையில் அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணுவதாகவும் காணப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர ஆசனம் பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது உலகளாவிய அதிகார யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்த முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா இணைவது சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும் என்று கூறினார்.
'பல ஆண்டுகளுக்கு முன்பே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகப் பேசினேன். எனவே இது எனக்குப் புதிய விடயம் அல்ல' என்று அவர் தெரிவித்தார்.
'நான் அந்த முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன். அது உலகளாவிய அதிகார யதார்த்தங்களின் நடைமுறையிலான வெளிப்பாடு என்று நான் நினைக்கிறேன். உங்களால் இந்தியாவை ஒதுக்கிவிட முடியாது. உங்களால் இந்தியாவை ஓரங்கட்ட முடியாது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவின் பிரதிநிதித்துவம், சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும்.'
வளர்ந்து வரும் சக்திகள் மற்றும் வளரும் நாடுகளை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா உறவில் இலங்கையின் நிலைப்பாடு
சிக்கலான இந்தியா - சீனா உறவுகள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, கொழும்பு, புது டெல்லியுடனான தனது விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதாகவும், அதேவேளையில் அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.
பிரதான எதிர்க்கட்சியாகிய நாங்கள் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும். நாங்கள் இந்தியாவுடன் ஒரு விசேட உறவை, ஒரு விசேட மூலோபாய உறவைக் கொண்டிருப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம், அந்த உறவு மிகவும் விசேஷமானது என்றும் அவர் கூறினார்.
அந்த சூழலில், நாம் மற்ற எல்லா நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். அமைதியை மேம்படுத்துவதே எங்களின் பொதுவான நோக்கமாகும். சமாதானத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம். இந்தியாவுடனான இந்த விசேட உறவைப் பேணும் அதே வேளையில், அனைத்துப் பிராந்தியங்களிலும் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வர ஒரு மத்தியஸ்தராக, நடுவராகச் செயற்பட விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





