இலங்கையை சிங்கப்பூராக சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர்: ஸ்ரீநேசன் எம்.பி.
ஜனாதிபதியொருவர் அரசு, அரசாங்கம், ஆட்சித்துறை மற்றும் ஆயுதப்பட்டையின் தலைவராக இருக்கின்றார். இவ்வளவு தலைமத்துவத்தை வைத்துக்கொண்டு இந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளதா?
இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதாக கூறிக்கொண்டு சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர். மிருசுவில் கொலைகள் தொடர்பான குற்றத்துடன் தொடர்புடையவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அப்படியென்றால் இனவாத ரீதியிலான செயற்பாடுகளே அளவுக்கு அதிகமாக நடந்துள்ளன. இவ்வாறு செய்தவர்களுக்கு உச்சமான சிறப்புரிமைகளுடனான வாழ்க்கையை அமைப்பதில் சமத்துவம்,சம உரிமை இருக்காது. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புங்கள். அப்போதே நாடு அபிவிருத்தியடையும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025 அன்று நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஜே.ஆர் ஜயவர்தன கொண்டு வந்ததுடன் அவருடன் இதுவரையில் 8 ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். ஜனநாயக ஆட்சி முறைக்குள் சர்வாதிகாரத்தை புகுதித்திய ஆட்சி முறையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். இந்த ஆட்சி முறையானது எங்களுக்கு என்ன நன்மை செய்தது. இந்நிலையில் எங்களை பொறுத்தவரையில் உரித்துரிமைகளை இல்லாமல் செய்வதையும் விட ஜனாதிபதி ஆட்சி முறை இருக்கக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடாகும்.
இப்போது மண்ணை தோண்டும் போது எலும்புகூடுகளை காண்கின்றோம். 230க்கும் மேற்பட்ட எலும்புகூடுகள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டள்ளன. முனனாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் இந்த நிலைமை இருந்தது.
இந்நிலையில் இப்போது மனித புதைகுழிகள் மட்டுமன்றி போதைப் பொருட்களும் குழிகளில் இருந்து மீட்கப்படுகின்றன. இதற்கெல்லாம் ஜனாதிபதி ஆட்சி முறையே காரணமாக இருந்துள்ளது. இதனால் இந்த ஆட்சி முறையை முழுமையாக அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடாகும் அதேபோன்று அளவுக்கடந்த சுகபோகங்கள் இவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதும் எங்களின் நிலைப்படாகும்.
ஜனாதிபதியொருவர் அரசு, அரசாங்கம், ஆட்சித்துறை மற்றும் ஆயுதப்பட்டையின் தலைவராக இருக்கின்றார். இவ்வளவு தலைமத்துவத்தை வைத்துக்கொண்டு இந்த நாடு முன்னேற்றமடைந்துள்ளதா? ஸ்ரீலங்காவை சிங்கப்பூராக மாற்றப் போவதாக ஜே.ஆர்.ஜயவர்தன கூறியிருந்தார். ஆனால், சித்திரவதை கூடங்கள்தான் இங்கே உருவாக்கப்பட்ட்டுள்ளனவே ஒழிய, சிங்கப்பூராக மாற்றப்படவில்லை என்பதன அனுபவத்தில் கூறுகின்றோம்.நாட்டில் பல புதைகுழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆட்சியாளர்கள் இதனை செய்துள்ளனர். இப்போது போதைப்பொருட்களும் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படுகின்றன. ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி இவர்கள் செய்த சேவைகளை விட மக்கள் பட்ட அவஸ்தைகள்தான் அதிகமாக உள்ளன.
உதாரணத்திற்கு மிருசுவில் கொலைகள் தொடர்பான குற்றத்துடன் தொடர்புடையவரை ஜனாதிபதியாக இருந்த கோதாபய ராஜபக்ச பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளார். அப்படியென்றால் இனவாத ரீதியிலான செயற்பாடுகளே அளவுக்கு அதிகமாக நடந்துள்ளன. இவ்வாறு செய்தவர்களுக்கு உச்சமான சிறப்புரிமைகளுடனான வாழ்க்கையை அமைப்பதில் சமத்துவம், சம உரிமை இருக்காது. மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புங்கள். அப்போதே நாடு அபிவிருத்தியடையும் என்றார்.





