சர்வதேச சுதந்திர நீதிப்பொறிமுறைஊடாகவே நீதி வேண்டும்: சர்வதேசத்துக்கு மகஜர்
இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை.

சர்வதேச சுதந்திர நீதிப்பொறிமுறை ஊடாகவே வடக்கு,கிழக்கில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளக் பொறிமுறையில் நம்பிக்கையில்லை எனச் சுட்டிக்காட்டியும் மகஜரொன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உட்பட சர்வதேச சமூகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி நேற்றையதினம் வடக்கு,கிழக்கின் எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினைத் தொடர்ந்து மேற்படி கோரிக்கை உள்ளிட்ட தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகளை உள்ளடக்கிய மகஜரில் பலதரப்பட்டவர்களும் கையொப்பமிட்டர்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே எமக்கான நீதியை வேண்டுகின்றோம்.
ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், வளச்சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், பெண்கள் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்குள்ளாக்கப்பட்ட, உள்ளாக்கப்பட்டு வருகின்ற பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 08 மாவட்டங்களிலும் 26 ஜுலை 2025 அன்று நாம் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக எமது ஏகோபித்த கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
இங்கு 'நாங்கள்' யாரென்றால்:
(1) வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கப்பட்டுள்ள அரச எந்திரத்தின் மிருகத்தனத்தின் கீழ் வாழ்ந்து வரும் தமிழர்கள்; (அரசு கூட, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது),
(2) அரசு புரிந்த சர்வதேச குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்த உயிருள்ள சாட்சிகள்,
(3) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவினர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள்.
'நாங்கள்' என்பதில் முப்படைகள், அரச திணைக்களங்களான தொல்பொருள் துறை, வனவிலங்குகள், கடலோர பாதுகாப்பு, வனத்துறைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டுள்ள தங்களின் தாய்நிலத்திற்காகப் போராடும் மக்கள், தெற்கிலிருந்து வந்த மீனவர்களால் கடற்படை மற்றும் மீன்வளத் துறையின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மூதாதையர் மீன்பிடித்த தளங்களை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்கள் அடங்குவர்.
இறுதியாக 'நாங்கள்' என்பது ஐ.நா. மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்.
குறிப்பாக தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான ஆட்சிகளை அமைத்து ஆண்டு வந்த வரலாற்று அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள். இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 1920 களில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் செய்த சமத்துவத்திற்கான உடன்பாடுகளை கைவிடத் தொடங்கிய சிங்கள அரசியல் தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழரின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எட்டப்பட்ட பல உடன்பாடுகளையும் தீர்வு முன்மொழிவுகளையும் கைவிட்டுள்ளனர். எங்களை ஏமாற்றியுள்ளனர். பதிலாக இலங்கையின் சிங்கள அரசின் ஒற்றையாட்சிப் பண்பைப் பேணுவதற்காக இராணுவத் தீர்வையே முன்னிறுத்தி வந்தனர். அதனை நடைமுறைப்படுத்த இன அழிப்பைக் கையிலெடுத்துடன், இன்று வரையில் தொடர்கிறனர். இந்த இன அழிப்பானது,
•யுத்தமாக முன்னெடுக்கப்பட்டபோது ஈழத் தமிழர்கள் வகைதொகையின்றி கூட்டாகவும் தனியாகவும் படுகொலை செய்யப்பட்டனர்.
•தொடர் இடப்பெயர்வு மற்றும் பல வருடகால அகதிமுகாம் வாழ்வை தமிழ் மக்களுக்கு வழங்கியது.
•சிங்கள அரச பொறிமுறை முன்னெடுத்த போரானது தமிழர்களின் இருப்பிடங்களையும், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் திட்டமிட்டவகையில் முற்றாக அழித்து தமிழர்களை வக்கற்ற நிலைக்குள்ளாக்கியது.
•பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகள் விசாரணைகளின்றிச் சிறையிடப்பட்டதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
•பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்
•இராணுவமயமாக்கல் இடம்பெற்றதுடன் திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் அதிகரிக்கப்பட்டன.
•அரச பாதுகாப்புப் பொறிமுறையின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.
அது மாத்திரமின்றி வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற சாதாரண மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் கூட இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகள் நீதியை வழங்க மறுத்து வருகின்ற வேளையில் சர்வதேச குற்றங்களை நிகழ்த்திய அரசே அதற்கான நீதியையும் அதே உள்ளகப் பொறிமுறையின் ஊடாகத் தர வேண்டுமெனக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைப் பலமுறை நாம் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் தெரிவித்திருந்தோம் என்பதனை தங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
இலங்கையின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை.
ஆகவே நாங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம் என்றுள்ளது.