செம்மணி மனிதப்புதைகுழி மிகமோசமான குற்றங்கள் இடம்பெற்றமைக்கு சான்று
மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்தினால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருப்பது குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம்.
அண்மையில் கண்டறியப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது சுயாதீன சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய மிகமோசமான குற்றங்கள் இடம்பெற்றமைக்கான வலுவான சான்றாக அமைந்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், இருப்பினும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தினால் இன்னமும் முன்னெடுக்கப்படாமை குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் 08-09-2025 ஜெனிவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வேல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.
அதன்போது சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் ஆசியப்பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் உரையாற்றிய பிரதிநிதி இலங்கை தொடர்பில் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:
மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்தினால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருப்பது குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம். அத்தோடு அண்மைக்காலங்களில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் இன்னமும் தொடர்கின்றன.
அத்தோடு யுத்தகாலத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புகூறல் செயன்முறையோ அல்லது அர்த்தமுள்ள மறுசீரமைப்புக்களோ நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டுவருகிறது. அச்சட்டமானது சட்டத்துக்கு உட்பட்டு தமது பணிகளை முன்னெடுத்துவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.
நாட்டின் வட, கிழக்கு மாகாணங்கள் மிதமிஞ்சிய இராணுவயமயமாக்கலுக்கு உள்ளாகியிருப்பதுடன் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அண்மையில் கண்டறியப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது சுயாதீன சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய மிகமோசமான குற்றங்கள் இடம்பெற்றமைக்கான வலுவான சான்றாக அமைந்திருக்கிறது என சுட்டிக்காட்டினார்.





