ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் சம்பந்தன்: அமைச்சர் பிமல்
நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் பொருத்தமானவராக இருந்தார். அந்த அதிஷ்டம் நாட்டுக்கு கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய,டபிள்யூ, ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்..
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத சிறந்தவொரு அரசியல்வாதியாக இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் மறைவு தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு எமது கவலைகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நான் 2001 முதல் 2010 வரையிலும் 2015 முதல் 2020 வரையிலும் எதிர்க்கட்சியில் இருந்துள்ளேன். அதன்போது எமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் இந்த பாராளுமன்றத்தில் வேறு அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட ஒருவராக இருந்தார். அவரின் அரசியல் கொள்கைகளில் நூறுவீதம் இணங்காதவர்களாக இருந்தாலும் நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கும் தலைவராக இருந்துள்ளார்.
இவருக்கும் எமக்கும் இடையிலான வயது வேறுபாடுகள் இருந்தாலும் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராக அவரை பார்த்தோம். அவருடன் 2010 - 2019 வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பான குழுவில் நெருக்கமாக பழகக் கிடைத்தது. சகல கூட்டங்களிலும் கலந்துகொண்டார். அவர் திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து பல்வேறு அனுபவங்களை கொண்டவர். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அரசியலமைப்பை தயாரித்தாலும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கின்றோம்.
அவர் உரையாற்றும் போது மனசாட்சிக்கு இணங்கிய பலமான உரையாக இருக்கும். அவ்வாறானவர்கள் இன்னும் இருப்பார்களாக இருந்தால் பாராளுமன்றத்தின் தரம் இன்னும் மேலுயரும். அவர் இந்த நாட்டின் பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நாட்டுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்காவிட்டாலும் அவரின் குணாம்சங்களை கொண்ட தலைவர்கள் அந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவமளிக்க வேண்டும் என்றார்.